கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு; பயணிகளுக்கு தடை

2 weeks ago 5

கோபி: கோபி அடுத்த கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் நேற்று காலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை பவானி ஆற்றில் நீர்வரத்து 150 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 1210 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருகிறது.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும் அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். மேலும் பவானி ஆற்றின் வழியோர கிராமங்களில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.

The post கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு; பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article