?கைரேகை, ராசி, ஜாதகம், ஓலைச்சுவடி இவற்றில் 100 சதவீதம் சரியான ஜோதிட பலன்கள் எதில் உள்ளது? ஏன்?

1 month ago 5

– ஆசை.மணிமாறன்,திருவண்ணாமலை.
சந்தேகமே இல்லாமல், “ஜனன ஜாதகம்’’ என்பதுதான் மற்ற இரண்டையும்விட பலன்களை அறிந்துகொள்வதில் பெரிதும் துணைபுரிகிறது. காரணம், நவகிரஹங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ஜாதகம் என்பது பலனைச் சொல்கிறது. கிரஹங்களின் சஞ்சாரம் உண்மை என்பதை நாம் பௌர்ணமி, அமாவாசை மற்றும் கிரஹணங்கள் போன்ற கண்ணிற்குத் தெரிந்த நிகழ்வுகளின் மூலம் உணர்ந்துகொள்கிறோம். ஓலைச்சுவடி என்பதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கைரேகையைக்கொண்டு பொதுவான பலன்களைத்தான் அறிந்துகொள்ள இயலுமே அன்றி, அவ்வப்போது மாறுகின்ற கிரஹ சூழ்நிலையைக்கொண்டு பலன் அறிந்துகொள்வது கடினம். ஆக, நவகிரஹங்களின் சுழற்சியைக் கொண்டு பலன் உரைக்கப்படும் ஜாதக முறையே மற்ற இரண்டையும்விட பலன் அறிவதில் பெரிதும் துணை நிற்கிறது. அதே நேரத்தில், 100 சதவீதம் துல்லியமான பலனை எந்த முறையிலும் அறிந்துகொள்ள இயலாது என்பதே உண்மை. அவ்வாறு 100 சதவீதம் துல்லியமான பலனை அறிந்துகொள்ள இயலும் என்றால், இறைசக்தி என்பதற்கே அர்த்தமில்லாமல் போய் விடும். ஆண்டவன் மனது வைத்தால், எதுவும் மாறும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

?நகங்களை வளர்ப்பது தரித்திரமான செயலா? நகங்களை எந்த நாட்களில் வெட்டக்கூடாது?

– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆம். நகங்களை பெரிதாக வளர்க்கக் கூடாது. செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நகங்களை வெட்டக் கூடாது. அதேபோல் அமாவாசை, கிருத்திகை போன்ற விரத நாட்களிலும், தமிழ்மாதப் பிறப்பு நாட்களிலும் நகங்களை வெட்டக்கூடாது. காலையில் குளிப்பதற்கு முன்னதாக நகங்களை வெட்ட வேண்டும். நகங்களை வெட்டிய கையோடு ஸ்நானம் செய்துவிட வேண்டும்.

?சிலருக்கு பிறந்த நேரம், நட்சத்திரம் தெரியவில்லை என்றால் எப்படி ஜாதகத்தை கணிப்பது?

– என். இளங்கோவன்,மயிலாடுதுறை.
ஜாதகம் கணிப்பதற்கு கண்டிப்பாக பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்கள் அவசியம் தேவை. இந்த விவரங்கள் இன்றி ஜாதகத்தை கணிக்க இயலாது. அதே நேரத்தில், இந்த விவரங்கள் இல்லாமல் அதாவது ஜாதகத்தை கணிக்காமல் பலன் அறியும் முறையும் ஜோதிடத்தில் உண்டு. பிரசன்ன ஜோதிட முறைப்படி ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள இயலும். உதாரணமாக, ஒருவருக்கு வேலை கிடைக்குமா, திருமணம் நடக்குமா, வீடு கட்ட இயலுமா போன்ற பல கேள்விகளுக்கான விடையை ஒரே நேரத்தில் இந்த முறையில் அறிய இயலாது. ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு கேள்விக்கான விடையை மட்டும் பிரசன்ன ஜோதிட முறைப்படி அறிந்துகொள்ள இயலும். ஆக ஜாதகம் இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றி அந்த நேரத்தில் தங்களுக்கு என்ன தேவையோ அதற்கேற்றவாறு கேள்வியைக் கேட்டு உரிய விடையை துல்லியமாக அறிந்துகொள்ள இந்த முறையானது பயன்படுகிறது.

?காசிக்கு நிகரான தலங்கள் தமிழகத்தில் எங்கு இருக்கின்றன?

– ஜெ.மணிகண்டன், வேலூர்.
காசிக்கு நிகர் காசி மட்டும்தான். அதற்கு நிகர் வேறு தலங்கள் கிடையாது. காசிக்கு வீசம் பெருசு என்றெல்லாம் பல ஊர்களைப் பற்றி பேசுவார்கள். பல சிவாலயங்களையும் காசிக்கு நிகராக தமிழகத்தில் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த கருத்துக்கள் எல்லாம் அந்த ஆலயத்தின் தலபுராணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவையே அன்றி, 18 புராணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டவை அல்ல. தலபுராணம் என்பது செவிவழிச் செய்தியாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்ததை அடிப்படையாகக் கொண்டது. ஆக, காசிக்கு நிகர் காசிதானே தவிர, வேறு தலங்கள் ஏதும் அல்ல என்பதே நிஜம்.

?சிவப்பு வர்ணம் ஊக்கம் தருமா?

– சு.பாலசுப்ரமணியன்,ராமேஸ்வரம்.
இது எந்தச் செயல் என்பதைப் பொறுத்தது. உதாரணத்திற்கு ராணுவ வீரர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு சிவப்பு நிறமும், படிக்கின்ற மாணவர்களுக்கு பச்சை நிறமும், மங்களகரமான செயல்களைச் செய்யும்போது மஞ்சள் நிறமும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு நீல நிறமும், ஆசிரியர் மற்றும் நீதித்துறையினருக்கு வெள்ளைநிறமும் ஊக்கம் தரும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான குணம் என்பது உண்டு. அதன் அடிப்படையில்தான் அந்த நிறங்களுக்கு ஏற்ற செயல்களும் தீர்மானிக்கப்படுகிறது.

?கோயிலில் உடைக்கப்படும் சிதறு தேங்காய்களை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாமா?

– டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

பயன்படுத்தலாம். ஆனால், நாமே உடைத்து நாமே எடுத்து சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. வேறுயாரோ உடைக்கும் தேங்காயை நாம் எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம். அதைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

?ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன?

– கா.திருமாவளவன்,திருவெண்ணெய்நல்லூர்.
சனி எனும் கோள், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கும். ஒருவரின் ஜென்ம ராசிக்கு முன் ராசியிலும், ஜென்ம ராசியிலும் ஜென்ம ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் நேரமே ஏழரை நாட்டுச் சனியின் காலம் என்பது ஜோதிட விதி. இந்த கணக்கின் அடிப்படையில் தங்கள் ராசிக்கு முன் ராசியில் ஒரு இரண்டரை வருடம், தங்கள் ஜென்மராசியில் ஒரு இரண்டரை வருடம், தங்கள் ராசிக்கு அடுத்த ராசியில் ஒரு இரண்டரை வருடம் என மொத்தம் ஏழரை ஆண்டு காலம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதால் இந்த ஏழரை ஆண்டு காலத்தினை ஏழரை நாட்டுச் சனி என்ற பெயரில் அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, தற்போது கும்பராசியில் சனி என்பவர் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால், மகரராசி, கும்பராசி மற்றும் மீனராசியைச் சேர்ந்தவர்கள் தற்போது ஏழரைச் சனியின் தாக்கத்தினைப் பெற்றிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ?கைரேகை, ராசி, ஜாதகம், ஓலைச்சுவடி இவற்றில் 100 சதவீதம் சரியான ஜோதிட பலன்கள் எதில் உள்ளது? ஏன்? appeared first on Dinakaran.

Read Entire Article