வேலூர், ஏப்.25: வேலூர் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த 2 நண்பர்களை போலீசார் ைகது செய்தனர். வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சுமார் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தண்டனை கைதிகளும் விசாரணை கைதிகளும் உள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், சிறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரைச் சேர்ந்த விஷ்ணு(22), வழிபறி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விஷ்ணுவை சந்திக்க அவரது நண்பர்கள் வேலூர் கஸ்பாவைச் சேர்ந்த மோகன்(24), பாகாயம் பகுதியைச் சேர்ந்த அரிஷ்(22) ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர்.
அப்போது பார்வையாளர் கூட்டத்தில் கைதி விஷ்ணுவை சந்தித்தபோது, இருவரும் வாயில் கஞ்சா மறைத்து, விஷ்ணுவிடம் கொடுத்துள்ளனர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த மோகன், அரிஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், மோகன், அரிஷ் ஆகியோரது செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அதில் கஞ்சா சப்ளை செய்வதற்கான கஞ்சா பொட்டலங்கள் போட்டோ வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தண்டனை கைதி விஷ்ணு மீதும் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கைதிக்கு கஞ்சா சப்ளை 2 நண்பர்கள் கைது வேலூர் மத்திய சிறையில் appeared first on Dinakaran.