திருவனந்தபுரம்: கேரளாவில் மாவட்ட நீதிபதி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட 950 பேரை கொலை செய்ய தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டிருந்தது என்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை ஒன்றிய அரசு கடந்த சில வருடங்களுக்கு முன் தடை செய்தது.
இதைத்தொடர்ந்து இந்த அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை பரிசீலித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க என்ஐஏவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி என்ஐஏ சார்பில் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது: தங்களது அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை கொல்ல பிஎப்ஐ சார்பில் ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதில் மாவட்ட நீதிபதி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சில அமைப்புகளின் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களது பெயர், விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எங்கெல்லாம் செல்வார்கள் உள்பட அனைத்து விவரங்களும் அந்த லிஸ்டில் உள்ளது. சிராஜுதீன் என்பவரிடமிருந்து 240 பேர் அடங்கிய பட்டியலும், அயூப் என்பவரிடமிருந்து 500 பேர் அடங்கிய பட்டியலும் கிடைத்தது.
எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் உள்ள பெரியார்வாலி என்ற வளாகத்தில் தான் இவர்கள் ஆயுதப் பயிற்சி மையம் நடத்தினர். இங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது இந்த கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் என்ஐஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post கேரளாவில் நீதிபதி, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட 950 பேரை கொலை செய்ய பிஎப்ஐ அமைப்பு திட்டமிட்டிருந்தது: நீதிமன்றத்தில் என்ஐஏ பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.