கேரளாவில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் ஒரே வார்டில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்: உடலை புதைக்க தடை

2 hours ago 1

திருவனந்தபுரம்: மலப்புரத்தில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் தொடர்பில் இருந்த பெண் நேற்று மரணமடைந்தார். இவருக்கு நிபா பாதித்துள்ளதா என்பது உறுதி செய்யப்படாததால் பரிசோதனை முடிவு வரும் வரை உடலை புதைக்க சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மங்கடா பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி நிபா பாதித்து உயிரிழந்தார். இவர் தவிர பாலக்காட்டைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கும் நிபா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த 450க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். பலியான மாணவி சிகிச்சை பெற்று வந்த கோட்டக்கல் தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் இதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவரையும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இந்தப் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முதற்கட்ட பரிசோதனையில் இவருக்கு நிபா இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் கூடுதல் பரிசோதனைக்காக இவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து பரிசோதனை முடிவு வரும் வரை உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

The post கேரளாவில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் ஒரே வார்டில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்: உடலை புதைக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article