கேரளா: கோவில் திருவிழாவில் வெடி விபத்து சம்பவம் - 3 பேர் கைது

2 months ago 13

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலீஸ்வரம் அருகே அஞ்சூற்றம்பலம் பகுதியில் வீரர்காவு கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சாமுண்டி வேடமணிந்து தெய்யம் ஊர்வலம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

ஊர்வலம் புறப்படுவதை அறிவிக்கும் வகையில், கோவில் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதில் இருந்து வெளியான தீப்பொறிகள், கோவில் அருகே பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் விழுந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பீதி அடைந்து, நாலாபுறமும் சிதறி ஓடினர்.

குடோன் அருகே நின்றிருந்த பக்தர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். அதோடு கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் படுகாயமடைந்தனர். மொத்தத்தில் இந்த சம்பத்தில் 154 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் வெடி விபத்தில் கோவில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. குடோனின் மேற்கூரையான தகர ஷீட் பறந்து சென்றதோடு, அந்த கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது.

தகவல் அறிந்த காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர், போலீஸ் சூப்பிரண்டு சில்பா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பட்டாசுகள் வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், குடோனில் இருந்து சில அடி தூரத்திலேயே பட்டாசு வெடித்ததே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு கண்ணூர் சரக டி.ஐ.ஜி. ராஜ்பால் மீனா, மீட்பு பணிகளை பார்வையிட்டார். வெடிவிபத்து சம்பவம் குறித்து நீலீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதி பெறாமல் பட்டாசுகளை வைத்திருந்ததாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article