
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது.
முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் 6-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார். அவருக்கு முன் 5-வது வரிசையில் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் பேட்டிங் செய்தார். அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளில் முறையே அக்சர் 52 மற்றும் 41 ரன்கள் அடித்து அசத்தினார். மறுபுறம் 6வது இடத்தில் விளையாடிய ராகுல் 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 12 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் மீண்டும் 5-வது வரிசையில் களமிறங்கிய ராகுல் 40 ரன்கள் அடித்தார். 6-வது இடத்தில் இறங்கிய அக்சர் 13 ரன்கள் அடித்தார்.
இதனிடையே முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் 6-வது வரிசையில் களமிறக்கப்பட்டதற்கு பல முன்னாள் வீரர்கள் தலைமை பயிற்சியாளரான கம்பீரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கம்பீரிடம் சமீபத்திய பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கம்பீர் கூறுகையில், "நிறைய பேர் இதைப் பற்றிப் பேசுவார்கள் என்பது எனக்குத் தெரியும். கிரிக்கெட்டை இப்படித்தான் விளையாட வேண்டும். இது பேட்டிங் வரிசையைப் பற்றியது அல்ல, யார் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது பற்றியது. நடுவில் ஒரு தரமான இடது கை பேட்ஸ்மேனை வைக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது?
"முதல் 5 பேட்ஸ்மேன்களும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டுமா என்ன? நாங்கள் சராசரிகள் மற்றும் புள்ளி விவரங்களை பார்ப்பதில்லை. அந்த சூழ்நிலையில் யார் அசத்த முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். அக்சர் அவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். ஆனால் எதிர்காலத்திலும் நாங்கள் இப்படித்தான் செல்வோம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.