கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளில் மழைநீரை விரைந்து வெளியேற்ற 33 அதிகாரிகள் அடங்கிய குழு: 24 மணிநேரமும் நீர்த்தேக்கங்கள் கண்காணிப்பு; தயார் நிலையில் 40 பொக்லைன் இயந்திரம்; நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

3 months ago 11

எண்ணூர்: அடையாறு, கூவம், கொசஸ்தலையாற்றில் நீரின் அளவு அதிகரித்தால் அவற்றை விரைவாக வெளியேற்றும் வகையில் 2 செயற்பொறியாளர்கள், 8 உதவி செயற்பொறியாளர்கள், 23 உதவி பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் வெள்ளம் சூழ்ந்து சேதம் ஏற்பட்டது. இதற்கு அதிகளவிலான மழை பெய்தது ஒரு காரணமாக இருந்தாலும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் போன்ற பிரதான கால்வாய்கள் உட்புற கிளை கால்வாய்களை மழைநீர் வடிகால்களில் வண்டல், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அடைத்து நீர் செல்ல முடியாத சூழலை உருவாக்கியது. இதனால் பல இடங்களில் மழைநீர் செல்ல முடியாமல் சாலைகளையும் குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பருவமழை தொடங்குவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீர்வளத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதாலும் பருவமழை தொடங்க உள்ளதாலும் நீர்தேக்கங்கள் மற்றும் நீர் வழித்தடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கம் நீர்வளத்துறை தலைமை அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டலங்களில் மண்டல கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 2 ஷிப்ட் அடிப்படையில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். இந்த மையங்களின் மூலம் பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் கூடுதலாக பொக்லைன் இயந்திரங்களை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பொக்லைன் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கூடுதலாக 10 இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும் அடையாறு, கூவம், கொசஸ்தலையாற்றில் நீரின் அளவு அதிகரித்தால் அவற்றை விரைவாக வெளியேற்றும் வகையில் 2 செயற்பொறியாளர்கள், 8 உதவி செயற்பொறியாளர்கள், 23 உதவி பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பருவமழை முடியும் வரை கண்காணிக்கப்பட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.

The post கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளில் மழைநீரை விரைந்து வெளியேற்ற 33 அதிகாரிகள் அடங்கிய குழு: 24 மணிநேரமும் நீர்த்தேக்கங்கள் கண்காணிப்பு; தயார் நிலையில் 40 பொக்லைன் இயந்திரம்; நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article