இந்த ரகம் குறைந்தபட்ச நீர் ஆதாரத்தில் கூட வளரும் தன்மை கொண்டது. தென்னம்பாளையைப் போன்றே நெற்கதிர்கள் வளர்வதால் இதனைக் கூம்பாளை என்கிறார்கள். சிவப்பு அரிசி ரகம். இதன் நெல்லும்கூட சிவப்பு நிறத்திலேயே இருக்கும். இது உடலுக்கு மிகுந்த வலுவைத் தரும். உடல் எடை கூட விரும்புவோர், வளரும் குழந்தைகள் ஆகியோருக்கு மிகவும் ஏற்றது. இரும்புச்சத்து கணிசமாக உள்ளதால் ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தும்.கூம்பாளை நெல் மணற்பாங்கான பகுதிகளிலும் செழித்து வளரக்கூடியது. சம்பா பருவத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். 130 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் இந்த நெல் 5 அடி உயரம் வரை ஓங்குதாங்காக வளரும். ஏக்கருக்கு சுமார் 1400 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும் தரக்கூடியது. கூம்பாளையை நாற்று முறையில் நடுவது மிகவும் நல்லது. நடவு செய்யும் முன்பு விதைகளை சுத்தமான முறையில் தயாரிக்க வேண்டும். விதைகள் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். முதலில் விதைகளை பாத்தியில் விதைத்து, துளிர்த்த பிறகு வயலில் நடவு செய்யலாம். பாத்தி அமைக்கும்போதே, நடவு வயலை தயாராக வைத்துக்கொள்ளுவது நல்லது. மண் நல்ல சத்துள்ளதா? என்று பார்த்து, அதற்கேற்றவாறு பண்படுத்த வேண்டும்.
கோடை காலத்தில் நன்றாக உழுது, மண்ணில் சத்து சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒரு உழவு செய்து அதே நிலத்தில் நாற்று நடலாம். நடவு செய்த பிறகு 15 முதல் 20 நாட்களுக்குள் அடிப்படையான உரம் கொடுத்த பிறகு மேலுரம் போட்டு பராமரிக்க வேண்டும். பயிர் வளரத் தொடங்கிய 15 நாட்களில் களைகளை முறையாக எடுத்து நீக்குவது அவசியம். பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படாது. அவசியம் எனில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகை அட்டை வைக்கலாம். இதுபோக ஐந்திலைக் கரைசலைப் பயன்படுத்தலாம். இந்த நுணா இலை, வேப்பிலை, துளசி, எருக்கம்பூ இலை, நொச்சி இலை ஆகியவற்றின் கலவையே ஐந்திலைக் கரைசல். ஊடு பயிராகப் பயிரிடுவது என்றால் விதை நேர்த்தி மட்டும் செய்தாலே போதுமானது. எந்த விதமான பராமரிப்பு இன்றியும் மிகச் சிறப்பாக வளரக்கூடியது. கூம்பாளைக்கு நீர் வளம் அதிகம் தேவை இல்லை என்பதால் ஓரளவு காய்ச்சலும் பாய்ச்சலுமான நீரே போதுமானது. இப்படி செய்து வந்தால் நெற்கதிர் 128 லிருந்து 130வது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சமாக 1.4 டன் நெல் கிடைக்கும். இதை அரிசியாக மாற்றினால் 700 கிலோ வரை கிடைக்கும். வெண்ணிற அரிசிகள் மீது உள்ள நாட்டத்தைக் குறைத்து இதுபோன்ற பாரம்பரியமான நெல் ரகங்களைச் சாகுபடி செய்வோம்!
The post கூம்பாளை நெல்! appeared first on Dinakaran.