*குறைந்த விலையில் தரமான மருந்துகளை வாங்கி பயன்பெற வேண்டுகோள்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெற வேண்டும் என அரசு தலைமை கொறடா கேட்டு கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 13 மருத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இம்மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஊட்டி என்சிஎம்எஸ்., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை கொறாடா ராமசந்திரன் பங்கேற்று முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப புதுப்புது நோய்கள் உருவாகி வருகின்றன. இதனால் மருத்துவ செலவிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினாலும், சிலர் தனியார் மருந்தகங்களையே நம்பி உள்ளனர்.சில மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்களால் வாங்க முடிவதில்லை.
இதனால் ஏழை மக்களும் பயன்பெறும் வகையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் 13 மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களில் குைறந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெற வேண்டும், என்றார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில்:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டத்தில், ஹில்பங்க்,சேரிங்கிராஸ்,தேனாடுகம்பை,ஊட்டி மார்க்கெட் மற்றும் என்சிஎம்எஸ்.,வளாகம் ஆகிய பகுதிகளிலும்கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி கூட்டுறவு கடையிலும்,கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில், பந்தலூர் பஜார்,கூடலூரில் 2 இடங்கள், பாடந்தொரை ஆகிய பகுதிகளிலும், குன்னூர் வட்டத்தில் கேத்தி பாலாடா, சேலாஸ் மற்றும் சாந்தூர் ஆகிய பகுதிகள் என மொத்தம் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இதில் 10 கூட்டுறவுத்துறை மூலமாகவும், 3 தனிநபர் தொழில் முனைவோர் சார்பிலும் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் ஜெனரிக் மருந்துகளும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் இருந்து சித்தா, யுனானி, இந்திய மருந்துகள் சர்ஜிக்கல், நியூட்ராசூட்டிக்கல்ஸ் மற்றும் ஓடிசி.,ஆகியவை பெறப்பட்டு மாவட்ட முதல்வர் மருந்தக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு மருந்தகங்களுக்கு விநியோகம் செய்யப்படும். மருந்து வகைகளுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டு மருந்தகங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமும், தனிநபர் தொழில் முைனவோர்களுக்கு மருத்தக கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.1.50 லட்சம் பண மானியமும், ரூ.1.50 மதிப்பில் ஜெனரிக் மருந்துகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பி.பார்ம்,எம்.பார்ம் படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே ஆகும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஒ., சதீஸ்குமார், துணை பதிவாளர்கள் மது, சித்ரா, அய்யனார், முத்துக்குமார், கமல்சேட், குமரசுந்தரம், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, சிவகாமி, பரிமளா, துணை தலைவர் ரவிக்குமார்,திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், விசாலாட்சி, முஸ்தபா உட்பட அரசுத்துைற அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவுத்துறை சார்பில் 13 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு appeared first on Dinakaran.