நன்றி குங்குமம் தோழி
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு வீட்டிலும் பத்து பேராவது இருந்தார்கள். அப்பொழுது யாராவது ஒருவர் அதிகம் வந்து குடும்பத்துடன் தங்கிவிட்டால் பாரமாகவே தெரியாது. தூரத்து உறவினரோ, பார்க்க ஆளில்லாமல் தனித்து விடப்பட்டவரோ, வசதியில்லாமல் கஷ்டப்படுபவராகவோ இருந்தால் அவரை தங்கள் குடும்பத்துடன் தங்கச் செய்வார்கள். யாரையும் தனித்து வசிக்க விடாமல் தங்கள் இல்லங்களில் பத்தோடு பதினொன்றாக சேர்த்துக் கொண்டார்கள். இதன் காரணமாக முதியோர் இல்லங்கள் என்ற பெயரே தெரியாமல் இருந்தது. தனிக்குடித்தனம் என்ற புரிதல் வந்தவுடன் குடும்பங்களில் அங்கத்தினர் எண்ணிக்கை குறையலாயிற்று.
கணவன்-மனைவி, குழந்தைகள்தான் குடும்பம் என ஆயிற்று. ஒரு ஆள் குடும்பத்தில் எண்ணிக்கைக் கூடினால் கூட, அது ஒரு பெரிய பாரம் போல் தோன்றுகிறது. விறகு அடுப்பில் விழாக்காலம் போல சமைத்தார்கள். இன்று இல்லாத வசதிகளே இல்லை என்று ஆனபின் ஒவ்வொரு வேலைக்கும் கஷ்டமாகத்தான் உள்ளது. யாரையும் நாம் குறை சொல்ல முடியாது. காலத்தின் கட்டாயம், அனைவருமே எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அனைத்தையும் விலை கொடுத்து வாங்க முடிகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கக்கூட முடியாத உணர்வுகள்தான் பாசமும் பந்தமும்.
அத்தகைய குடும்பங்களில் பெரியவர்கள் குடும்பத்தைப் பராமரிக்க, சிறியவர்கள் தங்கள் உறவுகளுடன் கைகோர்த்து ஆடிப்பாட கிடைக்குமே ஒரு ஆனந்தம். பெரியப்பா-சித்தப்பா பிள்ளைகள், அத்தை-மாமா பிள்ளைகள் என ஒரு குட்டி வகுப்பறையே வீட்டிற்குள் இருக்கும். வீட்டு முற்றமும், வாசல் வராண்டாக்களும், பின்புறத் தோட்டமும் விளையாட்டிற்கேற்ற இடத்தை மாற்றிப் பயன்படுத்துவார்கள். பழைய மிதி வண்டி அப்பா, தாத்தா பயன்படுத்தியது பரம்பரையாக வந்து கொண்டிருக்கும். அதற்கு போட்டி போட்டு ‘ஷிஃப்ட்’ எடுத்துக் கொள்வார்கள். ஊர் திருவிழா வந்துவிட்டால் போதும். குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் செல்வது ஒரு ஆனந்தம்.
விளையாட்டிற்கான பொருட்களை பத்திரப்படுத்துவதோடு அவர்களுக்குள் பிரித்து விடுவார்கள். பல மாதங்களுக்கு ஒரு முறை ‘சினிமா’ பார்க்கப் போவார்கள். சண்டையும் வாக்குவாதமும் சில நொடிகளுக்குத்தான் நீடிக்கும். அதற்குள் பெரியவர்கள் சிரிக்கச் சிரிக்கப் பேசி வாக்குவாதங்களை நிறுத்திவிடுவார்கள். ராத்திரியானால் ஒவ்வொரு பெரியவர் அருகிலும் இரண்டிரண்டு பிள்ளைகள் கை கால்களை போட்டுக் கொண்டு தூங்கும். விசேஷ நாட்கள் வந்தால் பலகை அல்லது சிறிய பாய் விரித்து அமரச் செய்து வாழைஇலையில் சாப்பாடு பரிமாறுவார்கள். அதிலும் யாருக்கு முதலில் என்பது பலப்பல வாக்குவாதங்களும் இனிமையான உரையாடல்களை நிகழ்த்தும்.
பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு பெரியவர்கள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போவார்கள். விளையாட்டுக்களில் ஒரு முக்கிய விளையாட்டு கூட்டாஞ்சோறு சமைப்பதுதான். அதிலும் அவரவர் வீட்டிலிருந்து பொருட்கள் கொண்டு வரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களே ‘யூ டியூப்’ பார்த்து சமைக்க சிரமப்படும் நேரத்தில், பெரியவர்களைப் பார்த்துக் கற்று அவர்களுக்கே தெரியாமல் அசத்தினார்கள் சிறுவர்கள். குடும்பப் பிள்ளைகள் வாரிசுகள் என அனைவரும் கூடி வளர்ந்த காலம் அது.
ஒரே தெருவில் கூட உறவினர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்தார்கள். கூட்டாஞ்சோறு தயாரானவுடன் அனைவருக்கும் வாழை இலையில் வைத்து தரப்படும். பெரியவர்கள் சாப்பிட்டுவிட்டு வாய் நிறைய பாராட்டுவார்கள். ஒருமுறை கூட்டாஞ்சோறில் சமைத்ததை அடுத்த முறை செய்யாமல் வேறு புது அயிட்டம் செய்வார்கள். ‘கூட்டாஞ்சோறு’ சமைப்பது என்பது பிள்ளைகளுக்கு ஒரு திருநாள் போன்றது. கண்ணால் பார்த்ததை கை செய்யும் அளவுக்கு கூட்டுக்குடும்பங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கலைகளைக் கற்றுத்தந்தன.
ஆசையுடன் சமைத்துப் பரிமாறுவது என்பது அழகான கலை. அதை பிள்ளைகள் விரும்பிச் செய்தார்கள். இன்று வாய்க்கு ருசியான உணவுகளை சமைக்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. ருசியான கை மணத்துடன் பாசமும் பந்தமுமல்லவா ஊட்டி வளர்க்கப்பட்டது. நிறைய பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும், பாசம் ஒட்டிக் கொண்டு வருமா? பந்தம் சேர்ந்து வருமா?
பாசத்துடன் அம்மா ஊட்டும் மோர் சாதம், மாவடு இன்று கிட்டுமா?
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த பிள்ளைகள் இது பற்றி அறிந்திருப்பார்கள் அல்லது கூட்டாஞ்சோறு சமைப்பதிலும் கூட ஈடுபட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கொண்டாட்ட நிகழ்வுகளை கிராமப்புறங்களில் கூட இன்று பார்க்க முடிவதில்லை. விடுமுறையானால் விளையாடிய நேரம் போக, மாங்காய் பறிப்பது, புளியங்காய் பறிப்பது அதில் யார் அதிகம் சேர்த்துள்ளார்கள் என்று பார்ப்பது இவையெல்லாம் மிகவும் ஆரோக்கியமான போட்டியை பிள்ளைகளுக்குள் உருவாக்கியது எனலாம். இன்று ஏ.சி. இல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அப்பொழுது செருப்புக்கூட போடாமல் வெயிலில் ஓடிப் பிடித்து விளையாடினார்கள்.
தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. பழங்கால ரேடியோ பெட்டி, பாடல் கேட்க அறை முழுவதும் கூட்டம் இருக்கும். மாலை வேளைகளில், குழுக்களாக பேசிக் கொண்டு ஆற்றங்கரை வரை நடந்து செல்வது ஒரு உடற்பயிற்சியாக அமைந்து விடும். கோடையில் காவிரியில் நீர் இருக்காது. கோபுர வீடு கட்டுவதும், மண்ணில் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவதும் சுகமான அனுபவமாக அமைந்தது.
திரும்பும் போது கோவிலுக்குள் சென்று தொன்னையில் பிரசாதம் வாங்கி ரசித்து சாப்பிட்ட காலங்கள் அவை. இப்பொழுது ‘கசின்’ (Cousin) என்று அவர்களை உறவு சொல்கிறோம். ஆனால் அப்பொழுது ஒன்றாக வளர்ந்ததால் அனைவருேம ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போன்று திகழ்ந்தனர். கமர்கட்டு, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், வண்ண ஆரஞ்சு மிட்டாய்கள்தான் அனைவருக்கும் இன்றைய (5 Star) ‘பைவ் ஸ்டார்’ போன்ற பிடித்த இனிப்புகளாக இருந்தன. இவையன்றி பெரியவர்கள் செய்யும் கை முறுக்கு, தட்டை, அச்சு முறுக்கு போன்றவை எப்பொழுதும் வீடுகளில் ‘டின்’ நிறைய வைத்திருப்பார்கள். வயதிற்கு வேண்டிய உணவு வயிற்றை ரொப்பக் கிடைக்கும் போது, மனமும் குளிர்ந்தே இருந்தது.
தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்து விட்டால் போதும், யார் எந்த மாதிரி உடை வாங்கப் போகிறோம் என்பது பற்றி நாட்கணக்கில் விவாதிப்பர். பெரியவர்கள் புதிதாக என்ன பலகாரங்கள் செய்யலாம் என்று திட்டமிடுவார்கள். பிள்ளைகள் புதிய மத்தாப்புகள், வெடிகள் பற்றி ஆராய ஆரம்பிப்பார்கள். இப்பொழுது எல்லாமே வேறு மாதிரி ஆகிவிட்டது. எண்ணெய் குளியல் போட்டு, புதுத் துணியுடன் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது சம்பிரதாயமாக இருந்தது. பெரியவர்கள் அனைத்து குடும்பப் பிள்ளைகளுக்கும் ஆசி வழங்கி பரிசாக காசும் தந்து மகிழ்விப்பர். யார் யாருக்கு எவ்வளவு பணம் வந்தது என்பது பற்றி பேசிக் கொள்வார்கள். காசை செலவு செய்யாமல் அவர்கள் உண்டியில் போட்டு விட வேண்டும்.
ஒரே மாதிரி உண்டியிருந்தால் குழப்பம் வந்து விடும் என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் விதவிதமான பொம்மை வடிவங்களில் மண் பானை உண்டியல்கள் தருவார்கள். பிள்ளைகள் அவ்வப்பொழுது தனியே அமர்ந்து தங்கள் சேமிப்பை எண்ணிப் பார்த்துக் கொள்வார்கள். சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை குடும்பத்தில் பிள்ளைகளுக்கு ஊக்குவித்தார்கள். கண்டிப்புடன் வளர்க்கப்பட்டாலும் கலாச்சாரங்கள் அப்படியே இருந்தன. பெரியவர்கள் நிறைய பேர் இருந்ததால் பாசமும் பரிவும் இருந்தன. பெரிய குடும்பங்களாக காணப்பட்டாலும் மகிழ்ச்சிக்குக் குறைவேயில்லை. கவலைகள் என்ற வார்த்தையே பழக்கத்தில் இல்லை. பாசம் மட்டுமே ஓங்கி நின்றது.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்
The post கூட்டாஞ்சோறிலும் பாச உணர்வு! appeared first on Dinakaran.