சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று இரவு திருச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரு துருவ அரசியல், 1977ல் இருந்து இப்போது வரை இருந்து வருகிறது. திமுகவா, அதிமுகவா என்ற அரசியல் களம் நீடித்து வருகின்ற சூழ்நிலையில், இதை மாற்றி அமைக்க வேண்டும் என பா.ஜ. முயற்சி செய்து வருகிறது. அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக-பா.ஜ. என்ற போட்டி அரசியலை உருவாக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறது.
பா.ஜ. தமிழ்நாட்டில் வேரூன்றி வலுப்பெற்று விட்டால், எதிர்காலத்தில் ஜாதிய சக்திகளும், மதவாத சக்திகளும் கொட்டமடிக்கும் நிலை ஏற்பட்டு விடும். இதை தடுக்க பா.ஜ.விற்கு, அதிமுக இடம் கொடுத்து விடக்கூடாது.
விடுதலை சிறுத்தைகள், ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கின்ற சூழ்நிலையில், மாற்று சிந்தனைக்கு இடமில்லை.கே.பி.முனுசாமி உள்பட அதிமுக முன்னணி தலைவர்கள் பேசும் கருத்து, புறம் தள்ளக் கூடியதல்ல. அதிமுகவிற்கு வரும் தேர்தல் நெருக்கடியானதுதான். பா.ஜ.வும் அதிமுகவை குறி வைத்துதான் காய்களை நகர்த்தி வருகிறது. பா.ஜ. சட்டமன்ற தேர்தலை தனித்து சந்திக்க விரும்பாது, விரும்பவில்லை. அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்வதாகத்தான் இருக்கும். இதற்காகத்தான் பல்வேறு நகர்வுகளை எடுத்து செல்வதை காண முடிகிறது. சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று சொன்னதற்கு பின்பு கடுமையான விமர்சனங்கள் மூலம் உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு யாரும் இரையாகி விடக்கூடாது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post கூட்டணிக்காக அதிமுகவை நோக்கி பாஜ காய்களை நகர்த்துகிறது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.