‘‘மனைவியை களமிறக்க தயாராக உள்ள தொகுதியில் நான்தான் நிற்கப்போறேன்னு இலைக்கட்சியில் சேர்ந்த மாஜி எம்எல்ஏ பேசியதும் மா.செ. கடுப்பாயிட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தின் மூத்த தொகுதி மாஜி எம்எல்ஏவானவர் சமீபத்தில் கட்சியை ‘கை’ விட்டு, இலைக்கட்சியில் இணைந்தார். தற்போது மாவட்டத்தில் இலைக்கட்சியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருது.. மூத்த தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மாஜி எம்எல்ஏவானவர், வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இலைக்கட்சி வேட்பாளராக நிற்கப் போகிறேன். கட்சியினர் ஒத்துழைப்பு தாருங்கள் என்றாராம்.. இதனை சற்றும் எதிர்பார்க்காத இலைக்கட்சியின் மா.செ. உள்ளிட்டோர் கடும் அதிருப்திக்கு ஆளாகிட்டாங்களாம்.. காரணம், கடந்த கால தேர்தல்களில் இலைக்கட்சி மா.செ.வின் மனைவியும், மகளிரணி முக்கிய நிர்வாகியுமானவரை, இதே மாஜி எம்எல்ஏதான் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2 முறை தோற்ற தொகுதியில் மீண்டும் களமிறங்க, மா.செ. மனைவியார் தயாராக உள்ளாராம்.. அப்படிப்பட்ட சூழலில், தொகுதியில் தான் நிற்கப் போவதாக நேற்று கட்சியில் இணைந்தவர் எப்படி கூறலாம்.. இன்னும் சொல்லப்போனால் தொகுதியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது இப்படி கூறலாமா? தலைமை முடிவெடுக்கும் முன்பே முந்திரிக்கொட்டையாக பேசுவதான்னு இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முண்டாசு கவிஞன் மண்ணில் விவசாயிகளுக்கும், காக்கிகளுக்கும் ஒரே அக்கப்போராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முத்து மாவட்டத்தில் முண்டாசு கவிஞன் பாரதியின் மண்ணில் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்களாம் காக்கிகள்.. அதாவது, இந்த பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் தடம் பதித்து வருகிறதாம்.. அவர்கள் உள்ளூர் தாதாக்களை கையில் வைத்துக் கொண்டு மின்சாரத்தை கொண்டு செல்ல விவசாய நிலங்களில் அத்துமீறி மின் கம்பங்களை நட்டு விடுகின்றனராம்.. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும், காற்றாலை நிறுவனங்களுக்கும் அக்கப்போராம்.. பல இடங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னை உருவாகிறதாம்.. இதற்கான பஞ்சாயத்திற்கு அங்குள்ள காக்கிகளை நாடினால் ‘உதவி’ செய்யாமல் ‘ராஜா’ போல அமர்ந்து கொண்டு ‘கமிஷனை வெட்டு’ என்கிறார்களாம்.. உயர் அதிகாரிகளுக்கு இதைக்கொண்டு செல்ல வேண்டிவர்களும் கூட்டு சேர்ந்து பர்சன்டேஜ் பார்க்கிறார்களாம்.. களத்தில் இறங்கி நிலத்தை உழுது களை பறிப்பவனுக்கு தான் கஷ்டம் தெரியும். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சொற்ப தொகையில் கூட கல்லா கட்டும் காக்கிகளால் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதும் எண்டு கார்டு போட்டுட்டு நழுவிட்டாராமே சேலத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியின் ஜெனரல் செகரட்டரியான சேலத்துக்காரரு, சொந்த ஊருக்கு எப்போது வந்தாலும் மீடியாக்களிடம் நீண்டநேரம் பேசுவாராம்.. ஆனால் லேட்டஸ்ட்டா வந்த போது, கூட்டணி குறித்து கேட்டதும் பேட்டியை முடிச்சுகிட்டாராம்.. வழக்கம் போல் மீடியாக்களை சந்திச்சவரு, இலைகட்சி ரெண்டாக, மூணாக இருக்குன்னு யாரும் பேசாதீங்க.. எலக்ஷன் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டும் கட்சி எங்களுக்குதான் என்று முழு அதிகாரம் வழங்கியிருக்கு.. நடந்து முடிஞ்ச பார்லிமெண்ட் எலக்ஷனில் 2019ஐவிட ஒரு பர்சன்ட் கூடுதல் ஓட்டு வாங்கியிருக்கோம் என்றாராம் சேலத்துக்காரர்.. 34 தொகுதியில் நின்னு தான், ஒரு பர்சன்ட் கூட வாங்கியிருக்கீங்க.. ஆனால், 20 தொகுதியில் நின்னு வாங்கியதை கணக்கிட்டால் இது குறைவு தானே என்று எதிர்கேள்வி வந்ததாம்.. ஆமாங்க., அப்போ தாமரை, மாம்பழம் எல்லாம் கூட இருந்துச்சு என்று பதில் சொன்னாராம்.. இதை மைண்டில் வச்சு கூட்டணி வருமா என்று அடுத்து வந்த கேள்விக்கு ‘நன்றி, வணக்கம்’ என்று எண்டு கார்டு போட்டு நழுவினாராம் சேலத்துக்காரரரு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுவையில் என்ன விவகாரம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக பதவியேற்ற திருமுருகனானவர் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உணர்ச்சிவசப்பட்டு பேசிய விவகாரம் காரைக்கால் பிராந்தியத்தையே அதிர வைத்தது. அதாவது தன்னை நம்பி வந்துள்ள நபர்களை நான் ஒருபோதும் கைவிடவே மாட்டேன்… அவர்கள் யார், யார்? என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனது உயிர்போனாலும்கூட அவர்களை நான் நடுகதியில் விட்டுவிட மாட்டேன் என உணர்ச்சிவசப்பட பேசினார். இவ்விவகாரம் சக அமைச்சரவை சகாக்களை மட்டுமின்றி ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காரைக்காலில் ஒரு பெண் அமைச்சர் காலி செய்யப்பட்ட நிலையில் அந்த இடத்தை நிரப்பியவர் திருமுருகனானவர் என்பதால் தற்போது இவ்விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.
The post கூட்டணி பற்றி கேட்டால் பதறிப்போய் ஓடும் சேலத்துக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.