ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்து விட்டது தேர்தல் ஆணையம். ஜார்க்கண்ட்டில் நவ.13, 20ம் தேதிகளிலும், மகாராஷ்டிராவில் நவ.20ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால் இன்று வரை தொகுதி பங்கீடு பா.ஜ மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் முடிவுக்கு வரவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் பா.ஜ கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு முடியும் முன்பே பா.ஜ 99 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பா.ஜவால் மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளையும் பங்கீடு செய்ய முடியவில்லை. அங்கு முதல்வர் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இழுத்துப்பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். சட்டப்பேரவை தேர்தலில் விட்டுக்கொடுக்க ஏக்நாத்ஷிண்டேவும், அஜித்பவாரும் தயாராக இல்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் எதற்கும் சம்மதிக்க மறுத்ததால், ஏமாற்றதுடன் டெல்லி திரும்பிவிட்டார் அமித்ஷா.
அந்த வேகத்தில் கூட்டணி கட்சிகள் சம்மதம் இல்லாமல் 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ அறிவித்து விட்டது. அதனால் இன்னும் குழப்பம் அங்கு. மறுபுறம் காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிகள் இணைந்த கூட்டணியிலும் குழப்பம். மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதியில் 30 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று விட்டது.
அதனால் சட்டப்பேரவை தேர்தல் களம் இன்னும் எளிதாக இருக்கும் என்றால், தொகுதி பங்கீடு முடிப்பதற்குள் மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி முடிந்துவிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவருடன் இனிமேல் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உத்தவ் தாக்கரே அறிவிக்கும் அளவுக்கு அங்கு இழுபறி. இந்த பிரச்னைகளை போக்க மகாராஷ்டிரா காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா, மும்பையிலேயே முகாமிட்டு அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தெரிவித்து பிரச்னையை சரிசெய்ய நினைக்கிறார்.
எதுவும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அத்தனையும் இழுபறி நிலையில் நீடிக்கிறது. மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 210 தொகுதிகள் யாருக்கு என்பது குறித்து பங்கீடு முடிந்து விட்டது. இன்னும் 78 தொகுதிகளை பிரிக்க வேண்டும். ஆனால் அக்.29ம் தேதிதான் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்னும் குழப்பம் அதிகரித்து இருக்கிறது. இன்னும் 5 வேலை நாட்களுக்குள் மனுத்தாக்கல் முடிக்க வேண்டும். ஆனால் கூட்டணி தொகுதி பங்கீடு இன்னும் இருதரப்பிலும் முடியவில்லை என்பதால் மகாராஷ்டிரா தேர்தல் களம் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளது.
அதே நிலைதான் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் களத்தில். அங்கு மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 70 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் ஆகியவையும் மீதம் உள்ள 11 தொகுதிகளை இடதுசாரிகள் மற்றும் லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளத்திற்கும் பிரித்து கொடுக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. ஆனால் லாலுகட்சி ஏற்க மறுக்கிறது. இதனால் மனுத்தாக்கல் முடியும் வரை இரு மாநிலங்களிலும் கூட்டணி குழப்பம் நீடிக்கும் என்பது இப்போதே தெரிந்து விட்டது.
The post கூட்டணி குழப்பம் appeared first on Dinakaran.