டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், பாஜக ஆட்சியில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் கும்பமேளாவுக்கு செல்ல பல்லாயிரக்கணக்கானோர் செல்வார்கள் என தெரிந்தும் போதுமான ரயில்களை இயக்காதது, ரயில் நடைமேடை திடீரென மாற்றப்படுவது போன்ற ரயில்வே துரையின் குளறுபடிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
ரயில்வே துறையின் இத்தகைய குளறுபடி காரணமாக அப்பாவி பயணிகள் பாதிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. கடந்த 11ம் தேதி பீகாரின் மதுபானி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போது வந்த சுதந்திர சேனனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதேபோல் சமஸ்திபூர் ரயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்த ரயில் மீது பயணிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியது. பீகாரில் மட்டுமல்ல உத்தரப் பிரதேசத்தின் முஷாபர் நகர் பகுதியிலும் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை கொண்டுள்ள பயணிகள் கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட ஏசி பெட்டிகளில் கூட்டமாக ஏறி பயணிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கும்பமேளாவில் பங்கேற்பதற்காக 50 லட்சம் பேர் ரயில்கள் மூலம் பயணித்துள்ளனர். ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேடுகளே உயிரிழப்புக்கு காரணம் என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தடுக்கி விழுந்ததே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேரும் உயிரிழக்க காரணம் என வடக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post கூட்ட நெரிசல், தாக்குதலுக்கு காரணம் என்ன?.. ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேடுகளே உயிரிழப்புகளுக்கு காரணம்: பயணிகள் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.