
புதுடெல்லி,
ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரவில் பயணித்த விஷால் சர்மா என்ற ரெயில் பயணிக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரெயில் ஊழியரான பவன் குமார் என்பவர் குழுவாக சென்று சர்மாவை தாக்கியுள்ளார். இதில் சர்மாவின் ஆடைகள் கிழிக்கப்பட்டன.
ரெயிலில் அங்கீகரிக்கப்பட்ட ரூ.15 மதிப்பிலான குடிநீர் பாட்டிலை ரூ.20-க்கு அந்த ஊழியர் விற்றுள்ளார். இதேபோன்று காபி மற்றும் நூடுல்சுக்கும் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி செயலி வழியே புகார் அளித்ததற்காக சர்மா தாக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி சர்மா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்திய ரெயில்வேயின் 3-ம் ஏ.சி. பெட்டியில் பயணிகளின் பாதுகாப்பு இது. வெட்கக்கேடு. ரெயிலில் தண்ணீர், உணவு வாங்கியதில் கூடுதல் கட்டணம் வசூலித்தது பற்றி புகார் அளித்ததற்கு என்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என அவர் வீடியோவுடன் தெரிவித்து உள்ளார்.
அந்த வீடியோவில், பச்சை நிற சட்டை அணிந்த ஊழியர், சர்மாவை படுக்கையில் இருந்து கீழே வரும்படி கூறுகிறார். ஆனால் அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். கூடுதல் கட்டணம் பற்றி புகார் தெரிவித்தது தவிர, வேறெந்த தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார்.
எனினும் அந்த ஊழியர் மேல் படுக்கைக்கு ஏறி, சர்மாவின் காலை பிடித்து இழுத்துள்ளார். இதில், அவர் அதிர்ச்சி அடைவதுடன், வீடியோ துண்டிக்கப்பட்டு விட்டது. எனினும், வீடியோவின் தொடர்ச்சியாக, சர்மா காயங்களுடனும், கிழிந்த ஆடைகளுடனும் காணப்படுகிறார்.
அதுபற்றிய 4 நிமிடங்கள் ஓட கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அது வைரலானதும், பலரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி. அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், அந்த குறிப்பிட்ட விற்பனையாளர் 5 ஆண்டுகளுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு இந்த தடை நீட்டிக்கப்படலாம் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, குறிப்பிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்திற்கு இந்திய ரெயில்வே நிர்வாகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.