கூடுதல் உழைப்புக்கு நல்வாய்ப்பு

3 months ago 34

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக உதயமாகியிருக்கிறார். இது திடீரென்று நடந்துவிடவில்லை. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம் என்பார்கள். அதுபோல துணை முதல்-அமைச்சர் பொறுப்பை அவருக்கு முதல்-அமைச்சர் சும்மா கொடுத்துவிடவில்லை. இந்த உயர்வு என்பது அவர் பல படிகளில் ஏறிவந்து அமர்ந்துள்ள இடமாகும். அவரது சிறுவயதில் இருந்தே தன் உழைப்பை தி.மு.க.வுக்காக நல்கியிருக்கிறார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கிராமங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது அவரது பிரசாரம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற அவரது பங்கும் மகத்தானது. இதே காலக்கட்டத்தில் அவர் தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல மு.க.ஸ்டாலின் எப்படி இளைஞர் அணி செயலாளராக கட்சி பணிகளில் ஜொலித்தாரோ அதுபோல உதயநிதி ஸ்டாலினும் இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்புக்கு பெருமை சேர்த்தார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 ஆயிரம் பேர் வீதம் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் பேரை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்த்து கட்சிக்கு வலுவூட்டினார். எந்த ஊருக்கு சென்றாலும் தி.மு.க.வில் உள்ள வயதான மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதையும், அவர்கள் வீடுகளுக்கு செல்வதையும் தன் முதல் பணியாக வைத்திருந்தார். இந்த அரும்பெரும் செயல் இளைஞர் மத்தியில் மட்டுமல்லாமல் மூத்த கட்சிக்காரர்களிடையேயும் அவருக்கு பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது. மேலும் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பையும் ஏற்படுத்தியது.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றி, சுற்றி பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அடிகோலியது. விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பை ஏற்றப்பிறகும் பல முத்திரைகளை பதித்தார். நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர் அணி நடத்திய போராட்டத்தில் அமைச்சராக இருந்துகொண்டே பங்கேற்றதும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நேரத்தில் அதையே கோரிக்கையாக வைத்ததும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா? என்பதை சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் நேரடியாக சென்று மிக தீவிரமாக கண்காணித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைப்போலவே உழைப்புக்கு பெயர் போனவர் உதயநிதி ஸ்டாலின். முதல்-அமைச்சருக்கு துணையாகவும், மக்களுக்கு துணையாகவும் விளங்குவதற்காக கட்சிக்கும், ஆட்சிக்கும் தூணாக விளங்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கியிருப்பது கட்சிக்காரர்கள் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சி திறன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்கவேண்டும் என்பதை மனதில் வைத்தே முதல்-அமைச்சரால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களைப்பொறுத்தமட்டில் தங்களுக்காக உழைக்க அவருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் நல்வாய்ப்பு என்றே கருதுகிறார்கள்.

Read Entire Article