சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குக்ஸ் ரோட்டில் உள்ள பெரம்பூர் சுரங்கப்பாதை, அகரம் ஜெகந்நாதன் சாலையில் புதிதாக அமைக்கப்படும் கொளத்தூர் பகிர்ந்த பணியிடம் மற்றும் பெரம்பூர் ஐசிஎப் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், பகுதி திமுக செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிறகு அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கொளத்தூர் தொகுதியில் மறைந்த மாணவி அனிதா பெயரில் கட்டணமில்லாமல் கணினி பயிற்சி மையத்தையும், இலவச தையல்பயிற்சி மையத்தையும் முதல்வர் உருவாக்கியுள்ளார். இம் மையத்தில் பயிற்சி பெற்று வரும் 105 பேருக்கு சான்றிதழ்களையும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 360 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வரும் 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் சென்னையில் முதன்முறையாக கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையம் பகிர்ந்த பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் படைப்பகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனையும் வரும் 4ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர், “கூடிக் கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை திமுக. கொள்கை சார்ந்த கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகம். எப்படிப்பட்ட புயல் மழை வெள்ளம் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து கடல் அலை முரணாக இருக்கின்றபோது கூட அதை நேர்த்தியாக நடத்தி செலுத்துகின்ற மாலுமி தமிழக முதல்வர் உள்ளவரை எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது” என்றார்.
The post கூடி கலைகின்ற மேகக்கூட்டம் இல்லை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.