கூடங்குளம்: கூடங்குளம் அருகே லோடுவேனில் கடத்திய 1890 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் மீனவ காலனி மிக்கேல் ஆண்டவர் குருசடி அருகில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் சப்இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லோடுவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 52 கேன்களில் சுமார் 1890 லிட்டர் மண்ணெண்ணெய்யை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேனில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், வள்ளியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (51) என்பதும், பெருமணலைச் சேர்ந்த அந்தோணி இன்னாசி மகன் ஜேம்ஸ் (48) என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்து விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார், பறிமுதல் செய்த 1890 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடுவேனை நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
The post கூடங்குளம் அருகே லோடுவேனில் கடத்திய 1890 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.