ஷில்லாங்,
இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு போட்டிகளில் ஒன்று கூச்பெஹார் டிராபி. இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 4 நாள் கொண்ட போட்டி ஆகும். இதில் மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 468 ரன் குவித்து 208 ரன் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக்கின் மகனான ஆர்யவீர் 34 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசி (229 பந்து) களத்தில் உள்ளார்.
ஆர்யவீர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதான ஆர்யவீர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்து வருவதாக ஏற்கனவே ஷேவாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.