பாட்னா,
பீகார் மாநிலத்தில் நவாடா மாவட்டத்தை மையமாக கொண்டு இந்திய அளவில் ஒரு நூதன சைபர் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இதன்படி மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'வேலைவாய்ப்பு' தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தரப்படும் என்றும், ஒருவேளை அந்த பெண்கள் கர்ப்பமாகாவிட்டாலும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளனர்.
இதனை நம்பி பலர் இந்த கும்பலை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வாறு பேசிய நபர்களிடம் அவர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர். மேலும் முன்பதிவு கட்டணம், ஓட்டல் அறை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதில் சில வாடிக்கையாளர்களின் செல்பி புகைப்படங்களை கேட்டுப் பெற்றுக்கொண்ட கும்பல், அந்த புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டவும் செய்துள்ளனர்.
இந்த சைபர் மோசடி குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்த நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இந்திய அளவில் இத்தகைய நூதன சைபர் மோசடி சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.