குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

2 weeks ago 2


திருவள்ளூர்: குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 1 பணியிடம் மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூக பணியாளர்களுக்கான 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1 பணியிடத்திற்கு ரூ27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலன் சார்ந்த துறையில் திட்ட உருவாக்கம், செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும். 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சமூக பணியாளர்கள் பணியிடத்திற்கு ரூ18,536 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், கணினியில் அனுபவம் இருத்தல் வேண்டும். 42 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்தவர்கள் அடுத்த மாதம் ஆறாம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முதல் தளம், டி பிளாக், எண்.118, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் – 602 001, தொலைபேசி – 044-27665595 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article