சேலம், செப்.30: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், நீர்நிலைகளில் குழந்தைகள் இறங்காதபடி பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும். குழந்தைகள் நீர் நிலைகளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியோர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்த விழிப்புணர்வினை அதிகளவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள ஆபத்தான நீர்நிலைகளில் எச்சரிக்கை பதாகைகள் வைத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.