குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆரிரோ விளையாட்டுகள்!

3 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

“என் குழந்தைக்கு ஆரோக்கியமான விளையாட்டுப் பொருளை கொடுக்க வேண்டும் என்ற தேடல்தான் இன்று ‘ஆரிரோ டாய்ஸ்’ உருவாகக் காரணம்” என பேசத் தொடங்குகிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாந்தினி. குழந்தைப் பருவத்தில் விளையாட்டுப் பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தப் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் இருந்தால் குழந்தைகள் அதிக ஈடுபாட்டுடன் விளையாடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கினை தவிர்த்து மரத்திலான ஆரோக்கியமான விளையாட்டுப் பொருட்களை நிஷாந்தினி மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து இதனை துவங்கியுள்ளனர்.

“என் குழந்தைக்காகத்தான் இதை ஆரம்பிச்சேன். ஒன்பது வருஷங்களுக்கு முன் என் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான விளையாட்டுப் பொருட்களை தேடிய போது நான் நினைச்சது போல கிடைக்கல. குறிப்பா மாண்டிசொரி கல்விமுறையின் அடிப்படையிலான பாதுகாப்பான ஆரோக்கியமான விளையாட்டுப் பொருட்கள் அந்த நாட்களில் நம் நாட்டில் பிரபலமா இல்லை. ஆனால் அதற்கான தேவை அதிகமா இருந்தது. நான் அடிப்படையில் மாண்டிசொரி கல்வி டீச்சர்.

குழந்தைப்பருவத்தின் முக்கியத்துவம் தெரியும். குழந்தைகளின் 80% மூளை வளர்ச்சி 3 வயதுக்குள் முடிவடைந்து விடும். அந்த வயதிற்குள் நாம் என்ன விதைக்கிறோமோ அது அவர்களின் வளர்ச்சிக்கு ஒரு வலிமையான அடித்தளமாக அமையும். அதற்கு மாண்டிசொரி கல்வி முறையின் விளையாட்டுப் பொருட்கள் உதவுகின்றன. ஆனால் இவை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்தது.

நம் நாடுகளில் ஏன் இல்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது. அதனால் ஒரு தச்சரிடம் வேப்ப மரக்கட்டை பயன்படுத்தி விளையாட்டுப் பொருளை தயாரித்தோம். அதைத்தான் என் குழந்தைக்கு விளையாட கொடுத்தோம். அதன்பிறகு வயதிற்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்களை தயாரித்தோம். அதைப்பார்த்த என் நண்பர்களும் அதே போன்ற விளையாட்டுப் பொருட்களை அவர்களின் குழந்தைகளுக்கு செய்து தருமாறு கேட்டனர். அப்போதுதான் எங்களை போலவே பலருக்கும் இதன் தேவை இருக்கிறது என்று தெரிய வந்தது’’ என்றவர் இதனை தொழிலாக அமைத்தது குறித்து விவரித்தார்.

‘‘கல்வி திட்டங்களில் ஏற்பட்ட மாறுபாட்டால், மாண்டிசொரி கல்விமுறைக்கான தேவை அதிகமானது. அதற்கான தேடலில் நாங்க நிறைய பயணங்களை மேற்கொண்டோம். மற்ற நாடுகளில் இந்தக் கல்வி முறை குறித்து தெரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் விளையாட்டுப் பொருட்களின் கண்காட்சி நடைபெறும். அங்கு அனைத்து விளையாட்டுப் பொருள் உற்பத்தியாளர்களும் வருவார்கள். அங்கு சென்றிருந்தபோது கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களின் தரம் மிகக்குறைவாக இருந்தது.

இதே பொருட்களை மற்ற நாடுகளில் தரமானதாக பார்த்திருக்கிறோம். ஆனால் மாண்டிசொரி கல்விமுறைக்கான விளையாட்டுப் பொருள்களை கேட்டபோது, தரக்குறைவான பொருட்களை அவர்கள் காண்பித்தது வருத்தமளித்தது. அப்போதுதான் புரிந்தது இந்திய சந்தைகளுக்கு மலிவான தரக் குறைவான பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். நம் நாட்டிலேயே தரமான மூலப்பொருட்கள் உள்ளன. நிறைய கைவினை கலைஞர்களும் இருக்கிறார்கள். நாம் ஏன் தரமற்றதை வாங்க வேண்டும். தரமான விளையாட்டுப் பொருள்களை நம் நாட்டிலே தயார் செய்யலாமே என்ற எண்ணத்தில்தான், இந்த விளையாட்டுப் பொருட்கள் நிறுவனத்தை தொடங்கினோம். முதலில் முகநூல் பக்கம் ஒன்றை ஆரம்பித்தோம். அதில் எங்களின் தயாரிப்புகளை பதிவு செய்தோம்.

மக்களும் அவர்களின் தேவையினை அதில் பதிவு செய்தார்கள். அதன் பிறகு அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் விதமாக பெரிய அளவில் தொடங்கினோம். 2018ல் ஆன்லைன் வெப்சைட்டும் ஆரம்பிச்சோம்’’ என்ற நிஷாந்தினி மர விளையாட்டுப் பொருட்களின் சிறப்பம்சங்களை கூறினார்.‘‘மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில்தான் நாங்க கவனம் செலுத்துகிறோம்.

பெரும்பாலானவை மாண்டிசொரி கல்விமுறையின் அடிப்படையில் தயாரிக்கிறோம். பிக்லர் ட்ரை ஆங்கிள் எனும் கற்றல் விளையாட்டை 100 வருடங்களுக்கு முன்பே எமி பிக்லர் என்பவர் கண்டுபிடித்தார். இது இந்தியாவில் அதிக புழக்கத்தில் இல்லை. அதனை பல முயற்சிக்கு பிறகுதான் எங்களின் நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்தோம். இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவும்.

குழந்தைகளுக்கு வீடு கட்டி விளையாடப் பிடிக்கும். அதில் புத்தக அலமாரி, தலையணை, அவர்களுக்குப் பிடித்த பொருட்கள் வைத்துக்கொள்வார்கள். அதனை மரத்தில் அமைத்துக் கொடுக்கும் போது சந்தோஷமாவார்கள். அதே போல் பேலன்சிங் போர்ட், லேர்னிங் டவர் மேலும் சென்சரி டேபிள் மண்ணில் விளையாட முடியாதவர்களுக்கு ஒரு மாற்றாக இருக்கும். பொதுவாகவே பெற்றோர்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் அதிக செலவு செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால் ஒரு விளையாட்டுப் பொருளை பல வழிகளில் பயன்படுத்துவது போல அமைத்திருக்கிறோம்.

ஃப்ளோர் ஜிம், பிறந்த குழந்தைகளுக்கான விளையாட்டு. படுத்திருக்கும் போது காலால் எட்டி உதைத்து, பிடித்து விளையாடவும் கயிற்றில் சில விளையாட்டுப் பொருட்கள் கட்டி இருப்போம். பிறந்த குழந்தைகளுக்கு அனைத்து வண்ணங்களும் கண்டறிய முடியாது என்பதால் குறிப்பிட்ட சில வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தி இருப்போம். குழந்தைகள் எளிதில் நடைப்பழக நடைவண்டியை பயன்படுத்துவார்கள். அது வாக்கராக உருமாறியது. மற்ற நாடுகளில் இவை தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் செயலை மேம்படுத்துவதற்காகத்தான் ஒரு பொருள் அமைக்க வேண்டுமே தவிர அவர்களை முழுவதுமாக கட்டுப்படுத்தக் கூடாது. வாக்கரில் குழந்தைகளை சரியான முறையில் அமர வைக்க முடியாது.

அதனால் டிஸ்பிளாசியா பிரச்னைகள் ஏற்படும். 90 காலக்கட்டம் வரை மரத்தில் செய்யப்பட்ட நடை வண்டியைத்தான் பயன்படுத்தி வந்தோம். அதனால் அதை மீண்டும் சந்தைப்படுத்த தொடங்கினோம். வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் ஆடும் குதிரையையும் குழந்தைகள் எளிதாக ஏறி அமரும் வகையில் உயரம் குறைவாக, பாதுகாப்பாக, வசதியாக அமர்ந்து விளையாடும்படியும் வடிவமைத்திருக்கிறோம்” என்றவர், ஆரிரோ டாய்ஸ் நிறுவனத்தின் நோக்கங்களை பகிர்ந்துகொள்கிறார்.

“எங்களின் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளும் கற்றல் செயல்பாடுகள் சார்ந்து வடிவமைக்கப் பட்டிருக்கும். அது குழந்தைகளின் வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவும். எளிமையான கட்டமைப்புகளுடன் இருப்பதால், குழந்தைகளால் அதிக கவனத்துடன் விளையாட்டில் ஈடுபட முடியும். சில நேரங்களில் பெற்றோர்களே இதில் மேலும் பல விஷயங்களை இணைத்திருக்கலாம் என்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு அந்த வயதில் என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதிகமாக திணித்து, கட்டாயப்படுத்தி விளையாட வைக்கும்போது அவர்களால் முழு ஈடுபாட்டுடன் விளையாடவோ, கற்றுக்கொள்ளவோ முடியாது.

முழுக்க முழுக்க இயற்கை பொருட்களைக் கொண்டுதான் இதனை தயாரிக்கிறோம். வண்ணங்களுக்கும் இயற்கை சாயங்கள்தான் பயன்படுத்தி இருக்கிறோம். குழந்தைகள் பயன்படுத்துவதால், ஆரோக்கிய மானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். மாண்டிசொரி கல்விமுறை 100 வருடங்களுக்கு முன்பிருந்தே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இப்போதுதான் அதைப்பற்றிய விழிப்புணர்வும் முக்கியத்துவமும் தெரிய வருகிறது. குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அதில் கவனமாக இருந்தாலே போதும், அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனை ஊக்குவிக்கும் விதமாக பிறந்த குழந்தைகளுக்கான கிஃப்ட் பாக்ஸ் கிட்டினை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

ஒவ்வொரு விளையாட்டுப் பொருளை உற்பத்தி செய்யும் போதும் மூன்று முக்கியமான நோக்கங்களை கடைபிடிக்கிறோம். அந்தப் பொருள் குழந்தைக்கு எவ்வாறு பயன்படுகிறது, இரண்டாவது பெற்றோர்கள் திருப்திகரமாக உணரணும். இறுதியாக அனைத்து வயதினரும் நீண்ட காலம் பயன்படும்படியாக இருக்க வேண்டும். தற்போது இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சந்தைப்படுத்துகிறோம். ஒவ்வொரு பொருள் அறிமுகம் செய்யும் முன் பெற்றோர்களின் ஆலோசனைப் பெற்று அதற்கு ஏற்ப மேம்படுத்துகிறோம். குழந்தைகளை ஆக்கப்பூர்வமான விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதில் ஒவ்வொரு பெற்றோரும் ஆர்வம் காட்ட வேண்டும்’’ என்கிறார் நிஷாந்தினி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆரிரோ விளையாட்டுகள்! appeared first on Dinakaran.

Read Entire Article