மாதவரம்: அமைந்தகரையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியை மீட்க வேண்டும் என்று மாநில குழந்தைகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜோஸ்பின், வளர்மதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதில், பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் கடந்த மாதம் 17 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதத்தின்படி 29 வயது வாலிபருடன் அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.
இதன்பின்னர் கணவருடன் வாழ்ந்துவந்த சிறுமியை மீட்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த அமைந்தகரை போலீசார் விரைந்து வந்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது உறுதியானது. இதன்பிறகு சிறுமியை மீட்டு கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமண வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
The post குழந்தை திருமணம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மீட்பு: பெற்றோருக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.