நல்லத் தூக்கத்தில் இருக்கும் போது திடீரென நம் கால் , கைகள் , பக்கவாட்டில் முதுகு என பிடித்து இழுத்துக்கொள்ளும். குறிப்பாக கெண்டைக் கால் பகுதியில் இந்த நரம்பு இழுத்துப் பிடித்துக் கொள்ளும் நிலை உண்டாகும். ஏன் இந்தப் பிரச்னை. மேலும் இதனை தவிர்ப்பது எப்படி?
காரணம்
கோடை காலத்தை விட குளிர் காலத்தில் தாகம் குறைவாகவே எடுக்கும்
என்பதால் பெரும்பாலும் நீர் அருந்துவதைத் தவிர்ப்போம். உடலில் போதிய அளவு சோடியம் இல்லாததாலும் உப்பு மற்றும் நீர் சத்து குறைவாக இருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு இந்த நரம்புப் பிடிப்பு ஒரு சில வினாடிகளில் சரியாகவில்லை எனில் உடனடியாக நரம்பியல் நிபுணர் அல்லது மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் வாதத்துக்கான அறிகுறிகளும் இப்படித்தான் இருக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். நீரிழப்பு, வயது, கர்ப்பம் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் தசைப்பிடிப்பு ஏற்படுவதை அதிகரிக்கலாம். உணவில் குறைந்த அளவு பொட்டாசியம், கால்சியம் அல்லது மெக்னீசியம் இருந்தால், கால் பிடிப்பை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்திற்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் இந்த தாதுக்கள் வெளியேற்றப்படும். மேலும், சில மருந்துகள் – எடுத்துக்காட்டாக, கொலஸ்ட்ரால் (ஸ்டேடின்கள்) அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்து (டையூரிடிக்ஸ்) இதற்கு காரணமாக இருக்கும்.
உடனடி தீர்வு!
கை கால்களை சட்டென இழுத்து சரி செய்யாமல், முதல் எந்த வாட்டில்பிடித்திருக்கிறது என்பதை மெதுவாக அசைத்துப் பார்த்து தெரிந்துகொண்டு பிடித்த இடத்தை மெல்ல நீவி விட்டு மசாஜ் செய்யுங்க. தொடர்ந்து மெதுவாக எழுந்து கால், கைகளை உதறி வலியைப் போக்கலாம். ஒரு சிலருக்கு வெந்நீர் அல்லது நீரில் நனைத்தால் கூட சரியாகும். அதையும் முயற்சி செய்து பார்க்கலாம். 500மிலி தண்ணீர் உடனடியாக எடுத்துக் கொண்டு சிறிது நேரம் நடக்கலாம்.
நிரந்தமான தீர்வு?
நீங்கள் தினமும் குறைந்த பட்சமாக 3 லிட்டர் தண்ணீராவது பருகுகிறீர்களா என்று சிந்தித்து பாருங்கள். அப்படி இல்லை என்றால் நாள் தோறும் நீங்கள் மூன்று ஒரு லிட்டர் பாட்டிலில் நீர் பிடித்து வைத்து கொண்டு ஒரு நாள் தொடங்கி அந்த நாள் முடிவதற்குள் அதனை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை என்று நீர் பாட்டிலை குடித்து காலி செய்வது இந்த பிரச்னைக்கு நிட்சயம் தீர்வு தரும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் பருகும் நீர் உங்கள் உடலை சுத்தப் படுத்துவதால் அடிக்கடி சிறுநீர்வெளியேற்றமும் நிகழும். பொதுவாக நாம் இப்போது உப்பு குறைந்த அளவே எடுத்துக் கொள்கிறோம். கேன் தண்ணீர் அல்லது ஆர்ஓ குடிநீர் பருகுகிறோம். தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்த பச்சை காய்கறிகள், முட்டை, இறைச்சி இவற்றை தேவையான அளவு உட்கொள்வதில்லை. இந்தக் காரணங்களாலும் கூட நரம்பு பிரச்னைகள் உண்டாகும். மசாஜ் செய்தால் தசைப்பிடிப்பு வலியிலிருந்து விடுபடலாம். உடற்பயிற்சி அல்லது வேலையின் போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.ஓட்டப்பயிற்சியின்போது எடுத்துக்கொள்ள ஸ்போர்ட்ஸ் கடைகளில் “மல்டி வைட்டமின் சப்பிளிமென்ட்” கிடைக்கும். இரண்டு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தமாக வாங்கினால் விலை மலிவாக இருக்கும். Expiry தேதி பார்த்துக்கொள்ளுங்கள்.தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் (பிரஷர் மாத்திரை எடுக்கும் அதே நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது).
சமையலுக்கு அதிகம் ப்ளீச் செய்யப்படாத கல் உப்பையோ அல்லது இந்து உப்பையோ (Pink Salt from Sind Pakistan) உபயோகிக்கவும். டார்க் சாக்லேட் மெக்னீசியம் நிறைந்த சத்தான மற்றும் சுவையான உணவாகும். அவகோடா எனப்படும் வெண்ணெய் பழங்கள் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இத்துடன் கீரை, சால்மன், ப்ரோக்கோலி , பூசணி விதைகள், வாழைப்பழம், தயிர், பாதாம், முந்திரி உள்ளிட்ட உணவுகளை அதிகம் உடலில் சேர்த்துக்கொள்ளலாம். தகுந்த உடற்பயிற்சி உடலின் தசை, நரம்புப் பகுதிகளை சீராக செயலாற்ற வைக்க உதவும். மேலும் ரத்த ஓட்டம் சீரானாலே உடலுக்கு தேவையான திரவம் எங்கும் பரவும். எதுவானாலும் நீரின்றி எதுவும் அமையாது என்பதற்கு ஏற்ப போதுமான அளவு நீர் அருந்துவது நல்லது.
– கவின்.
The post குளிர்கால நரம்புப் பிடிப்பு… தவிர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.