சென்னை: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து சென்னையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குளறுபடிகள் இல்லாமல் தேர்தல் நடைபெற ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் 100 சதவீதம் இணைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். புதிய இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் பதவியேற்றார்.
அவர், தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து டெல்லியில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையொட்டி, தேர்தல் நடைமுறையை வலுப்படுத்துவது மற்றும் குறைகளை கேட்டறிவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூடுதல் முதன்மை தேர்தல் அதிகாரிகள் ஸ்ரீதர், ஆனிஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி பிரதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்படி, ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), சூரியபிரகாசம், நவாஸ் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜ), குணசேகரன், ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட்.), பெரியசாமி வீரபாண்டி (இந்திய கம்யூனிஸ்ட்), பார்த்தசாரதி, ஜனார்தன் (தேமுதிக), பாலசிங்கம், குணவழகன் (விசிக), பாக்யராஜ், செந்தில்குமார் (நாம் தமிழர் கட்சி), ஜோசப்ராஜா, ஸ்டெல்லா மேரி (ஆம்ஆத்மி), சீனிவாசன், ரமேஷ் (தேசிய மக்கள் கட்சி), ஆனந்தன், ஜெய்சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நாதக, விசிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் முதல்முறையாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 18 வயது எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்ளிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு ஆர்.எஸ்.பாரதி (திமுக) நிருபர்களிடம் கூறியதாவது: எந்தவித குளறுபடியும் இல்லாத வாக்காளர் பட்டியல் தேவை என்று திமுக தொடர்ந்து வலிறுத்தி வருகிறது. அதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை பலமுறை நடந்த கூட்டங்களில் சுட்டிக்காட்டி உள்ளோம், அவை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதுதான் நியாயமான முறையில் வாக்குபதிவு நடக்கும்.
இறந்துபோனவர்கள் பெயர் பட்டியலில் இருக்கும் பொழுது பிரச்னை வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதை சரி செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல சமூக ஊடகங்கள், ஊடகங்களில் விளம்பரம் கொடுப்பதற்கான குழுக்கள் தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்கும்போது காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த காலதாமதம் இல்லாமல் விரைந்து அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் எனவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். அனைவரது ஆதார் கார்ட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (அதிமுக): ஜனநாயகத்தில் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும், வாக்காளர் பட்டியல் என்பது அடிப்படை விஷயம். பட்டியலில் பெயர் இருந்தால் ஜனநாயக கடமை ஆற்ற முடியும். கடந்த தேர்தல்களில், அவ்வப்போது இதை சுட்டிக்காட்டினோம், பல குளறுபடிகள், பெயர் மாறி இருக்கும், இறந்தவர்கள் ஓட்டு போடும் நிலை உள்ளது. இறந்தவர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாங்கி, அதை வாங்கி முதலில் நீக்க வேண்டும். இறந்தவர்கள் இன்னும் பட்டியலில் உள்ளது.
எழுத படிக்க தெரியாதவர்களை தேர்தல் ஆணையம் பிஎல்ஓ-வாக நியமிக்கிறார்கள். டேபிள் போட்டு உட்காரும் இடத்திலும் பூத் சிலிப் ஒழுங்காக வழங்கப்படுவது இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் பூத் சிலிப் கொடுத்தால் அவர்கள் தேர்தலில் எளிதாக வாக்களிக்க முடியும். தேர்தல் காலத்தில் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடப்படுகிறது. யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
கடந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடியாக, கடந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்கள் பெயர் இந்த முறை வாக்களிக்க முடியவில்லை. வெளியில் ஒரு பட்டியல், உள்ள ஒரு பட்டியல் வைக்கப்படுகிறது. எப்படி வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது. 4 கோடி மேற்பட்டவர்கள் மட்டுமே ஆதார் கார்டை லிங்க் செய்துள்ளார்கள். மீதமுள்ள 2 கோடி பேர் ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க வேண்டும். 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 100 சதவீதம் குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினர்.
The post குளறுபடிகள் இல்லாமல் தேர்தல் நடைபெற வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை 100% இணைக்க வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.