குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

3 months ago 20

குளச்சல்: குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் கடல் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேளமீன் ஆகிய மீன்கள் பிடிக்கப்படும்.

இன்று அதிகாலை மீன் பிடிக்க சென்ற பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் 8 மணியளவில் கரை திரும்பின. அவற்றுள் ஏராளமான நெத்திலி மற்றும் சாளை மீன்கள் கொத்து கொத்தாக கிடைத்தன. கட்டுமர மீனவர்கள் அவற்றை கரை சேர்த்து ஏலக்கூடத்தில் வைத்து விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் இன்று ₹600 முதல் ₹1000 வரை விலை போனது. வழக்கமாக இந்த மீன் ரூ.1000 முதல் ரூ.1800 வரை விலை போகும் என்பது குறிப்பிடத்தக்கது. நெத்திலி மீன்கள் ஏராளமாக கிடைத்தும் விலை குறைவாக விற்பனை ஆனதால் கட்டுமர மீனவர்கள் கவலையடைந்தனர்.

The post குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article