ஸ்ரீ வைஷ்ணவத்தில் எடுத்துக் கொண்டால் திவ்ய பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், சைவத்தில் தேவார திருவாசகங்களைப் பாடிய நால்வர் என்று பொதுவாகப் பார்க்கிறோம். முகுந்த மாலை என்கிற இந்த அற்புத துதி நூலை குலசேகராழ்வார் அருளிச் செய்திருக்கிறார். பொதுவாக குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி எனும் பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார் என்பது தெரியும். ஆனால், இதே குலசேகராழ்வார் சமஸ்கிருதத்திலேயும் ஒரு ஸ்தோத்திர நூலை அருளியிருக்கிறார். அதுதான் நாம் பார்க்கும் முகுந்தமாலை. இதேபோல, மாணிக்கவாசகரும் திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் குறித்தும், அம்பிகை குறித்தும் சமஸ்கிருதத்தில் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார் என்பது இங்கு கூடுதல் தகவல். இப்படியாக ஸ்ரீவைஷ்ணவத்தில் குலசேகராழ்வார் முகுந்தமாலை என்கிற அற்புதமான பக்தி ரசம் சொட்டச் சொட்ட முகுந்தனுக்கு ஒரு மாலையை சாற்றியிருக்கிறார்.
குலசேகராழ்வாரின் திவ்ய பிரபந்தங்களை எடுத்துக்கொண்டால் ராமாவதாரத்தை மையமாக வைத்துத்தான் நிறைய இருக்கும். அதாவது அவரிடமிருந்து வெளிப்பட்டது முழுக்க முழுக்க ராமானுபவம்தான். இந்த சமஸ்கிருதத்தில் இருக்கக்கூடிய முகுந்தமாலை எப்படி இருக்கிறது எனில், இது முழுக்க முழுக்க கிருஷ்ணானு பவமாக இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தை மையமாக வைத்து பண்ணப்பட்ட ஸ்தோத்திரமாக இருக்கிறது. அப்போது கிருஷ்ணானுபவம் தான் அதிகமாக இருக்கிறது. இந்த ஸ்தோத்திரத்தில் இருக்கும் முதல் ஸ்லோகத்தைப் பார்க்கும் முன்பு, ஸ்ரீவைஷ்ணவத்தில் சொல்லப்படக் கூடிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன.
அதிமுக்கியமான விஷயம் என்னவெனில், சரணாகதி என்று சொல்லக்கூடிய பிரபத்தி நெறி. அதற்கு அடுத்து பகவன் நாமாவிற்கு இருக்கக் கூடிய உயர்வு. நாம சித்தாந்தம். அதற்கடுத்து, பகவானுடைய பரத்துவம். ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவமாக இருக்கிறான் என்பது. இப்படி ஸ்ரீவைஷ்ணவத்தில் சொல்லக் கூடிய எல்லா விஷயங்களுமே, ஆழ்வார் நமக்கு முகுந்தமாலையில் தொட்டுக் காண்பித்து விடுகிறார். நாற்பது ஸ்லோகங்கள் இந்த முகுந்தமாலை. அதில் மிகவும் அதிகமாக நமக்கு காண்பிக்கப்படக் கூடியது எதுவெனில், பகவன் நாமாதான்… பகவன் நாம சித்தாந்தம்தான். அதிலும் அந்த நாம சித்தாந்தத்தை கிருஷ்ணாவதாரம் மூலமாக… கிருஷ்ணானுபவம் மூலமாக நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்.
இப்போது நாம் பார்ப்பது முதல் ஸ்லோகம்.
ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதி
நாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதினம் குருமே முகுந்த
இப்போது ஆழ்வார் தொடங்கும்போதே, ஸ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதி…. என்று பகவானுடைய வெவ்வேறு நாமங்களை சொல்லி, ஸ்ரீவல்லபன், வரதன், தயாபரன், பக்தப் பிரியன், பவலுண்டன கோவிதன், நாதன், நாக சயனன், ஜகந்நிவாசன் என்று எட்டுவிதமான நாமாக்களைச் சொல்லி, இந்த நாமாக்களை எல்லாம் சொல்லக் கூடியவனாக என்னை நீ ஆக்க வேண்டு மென்று, ஒன்பதாவதாக முகுந்தனிடம் பிரார்த்தித்து நிறைவு செய்கிறார்.
இந்த நாமாக்களைச் சொல்லி… இறுதியாக அந்த நாமங்களையெல்லாம் சொல்லுபவனாக, ‘‘ஆலாபனம் பிரதி பதம் குருமே முகுந்த…” இந்த ஒவ்வொரு நாமாக்களையும் அடிக்கடி சொல்லுபவனாக ஆலாபனம் பண்ணுபவனாக …. பேசுபவனாக… சொல்லுபவனாக… என்னை ஆக்குவாய் முகுந்தா என்று கேட்கிறார்.
முகுந்தமாலை என்கிற இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தின் தாத்பரியமே பகவானின் ஒவ்வொரு நாமாவையும் நாம் சொல்லிக் கொண்டே பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான். அப்படி அவர் சொல்லும்போது, அவர் எப்படித் தொடங்குகிறார் எனில், ஸ்ரீ வல்லபேதி என்று தொடங்குகிறார். இந்த முதல் விஷயத்திலேயே நமக்கு சில விஷயங்களை ஆழ்வார் காண்பித்துக் கொடுக்கிறார். ஸ்ரீ வல்லபேதி என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. எப்போதுமே பிராட்டியை முன்னிட்டுக் கொண்டுதான் நாம் பகவானை அடைய முடியும். அப்போது பிராட்டியானவள் புருஷகார சக்தியாக இருந்து, ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைத்து வைக்கிறாள்.
இங்கு ஸ்ரீவல்லபன் என்று பகவானுக்கு ஒரு நாமம். அந்த நாமத்திற்கான அர்த்தம் என்னவெனில், ஸ்ரீ ஆகிய மகாலட்சுமி யாருக்கு வசப்பட்டவளோ, அல்லது ஸ்ரீ ஆகிய மகாலட்சுமிக்கு யார் வசப்பட்டவனோ அவனுக்கு ஸ்ரீவல்லபன் என்று பெயர். இங்கு ஆழ்வார், முதல் ஸ்லோகத்தில் முதல் நாமாவே ஸ்ரீ வல்லப என்றுதான் தொடங்குகிறார். இப்படி திவ்ய தம்பதியாக இருக்கக்கூடிய பிராட்டியையும் பெருமாளையும் சேர்த்து சொல்லக்கூடிய நாமாவே ஸ்ரீ வல்லபன் என்பதாகும்.
இது ஒன்று. இன்னொன்று குலசேகராழ்வார் சேர நாட்டைச் சார்ந்தவர். கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவிலுள்ள முக்கிய திவ்ய தேசங்களில் ஒன்று திருவல்லவாழ் என்பதாகும். இப்போது அதை திருவல்லா என்பார்கள். இந்த திவ்ய தேசத்தில் பகவான் ஸ்ரீ வல்லபன் என்கிற திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். தமிழில் திருவாழ்மார்பன் என்று பெயர். சமஸ்கிருதத்தில் ஸ்ரீ வல்லபன். சேர நாடான தன்னுடைய நாட்டில் இருக்கின்ற திவ்யதேசப் பெருமாளை கொண்டு இந்த ஸ்லோகத்தை தொடங்கியிருக்கிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஸ்ரீ வல்லபேதி… வரதேதி… தயாபரேதி… என்று எடுத்தவுடனே மூன்று நாமங்களை சொல்கிறார். அவன் பிராட்டிக்கு வசப்பட்டவன், பிராட்டியோடு இணைந்திருப்பவன் அதனால் ஸ்ரீ வல்லபன்.
அப்படி பிராட்டியோடு இணைந்திருப்பதால் என்ன பலனெனில், பிராட்டியோடு இணைந்திருப்பதால் வரதனாக இருக்கிறான். நாம் கேட்கக் கூடிய வரங்களையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் தரக்கூடியவனாக வரதனாக இருக்கிறான். அதற்கடுத்து, அவன் கேட்டதையெல்லாம் கொடுத்தால் மட்டும் போதாது. கேட்டதையும் கொடுப்பதைத் தாண்டி நமக்கும் அவனுக்கும் அத்யந்த அன்யோன்ய பாவம் இருக்க வேண்டும். அந்த அன்யோன்ய பாவம் எப்படி வருமெனில், அவன் நம்மீது கொண்டிருக்கக் கூடிய தயை மூலமாக வரும். அந்த தயையை அவனுக்கு உண்டாக்குபவள் யாரெனில், அதுவும் பிராட்டிதான். அவன் ஸ்ரீவல்லபனாக இருப்பதாலும், பிராட்டி சொல்படி அவன் வரதனாக இருக்கிறான். அந்தப் பிராட்டி நமக்காக அவன் நெஞ்சத்தில் தயையை உண்டுபண்ணுவதால் தயாபரனாக
இருக்கிறான்.(அடுத்த இதழில்)
ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்
The post குலசேகராழ்வார் அருளிய முகுந்த மாலை appeared first on Dinakaran.