சென்னை: பார்கவுன்சில் சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாக குற்ற வழக்கு நிலுவையில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் பதவி வகிப்பதை எதிர்த்த வழக்கில் அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வரதன் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மற்றும் பார்கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு கடந்த 2018 மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 உறுப்பினர்களால் தலைவர், துணை தலைவர், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்களுக்கு குற்ற பின்னணி இருக்க கூடாது என்று பார் கவுன்சில் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்வதற்கான சுற்றறிக்கையை அகில இந்திய பார்கவுன்சில் 2024ல் வெளியிட்டது. அதன் அடிப்படையில் குற்ற பின்னணி உள்ள வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் வி.கார்த்திகேயன் மீது குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, காவல்துறை முன்னாள் உயர் அதிகாரிகளும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு பார்கவுன்சில் நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுவது விதிகளுக்கு முரணானது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அகில இந்திய பார்கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார்கவுன்சில், துணை தலைவர. வி.கார்த்திகேயன் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில்தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
The post குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் செயல்பட தடை கோரி வழக்கு: அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.