நவராத்திரி விழாக்கள், தீபாவளி, கார்த்திகை என நம் வீடுகள் களைகட்டத் துவங்கி விட்டது. நவராத்திரி, கொலு, தீபாவளி, உள்ளிட்ட விழாக்களுக்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ‘ரிட்டன் கிஃப்ட்’ அளிக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இவ்வாறு பரிசுப் பொருட்களை அளிப்பதிலும் தனித்துவத்தைக் காட்ட முடியும் என பலரும் நிரூபித்து வருகிறார்கள். தனித்துவமான பரிசுப் பொருட்கள் தருவது அவர்கள் மனதில் உடனடியாக இடம் பிடிக்க ஏதுவாக இருக்கிறது. முன்னரே திட்டமிட்டு, மற்ற யாரும் அளிக்காத சிறப்பான பரிசைக் கொடுக்கும்போது, அவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. பரிசுப் பொருளில் ஒருவருடைய பெயரை பொறித்து அளிப்பது,உருவத்தை வடிவமைப்பது, புகைப்படத்தை அச்சடிப்பது என எண்ணற்ற வகைகள் உள்ளன. பண்டிகை விழாக்களில் கடவுளர்களின் படங்கள், சாவிக்கொத்துக்கள், மஞ்சள் குங்குமம்,தாம்பூலம், சிறு சிறு பரிசு பொருட்கள், பர்ஸ்கள், சுருக்கு பைகள், ஜூட் பேக்குகள், சிறிய செயின்கள் , கம்மல், வளையல் முதல் வசதி படைத்தவர்கள் வெள்ளி பொருட்கள் வரை என “ரிட்டன் கிஃப்ட்கள்” தருவது என்பது கௌரவமாக இருக்கிறது. இன்று லட்சக்கணக்கான ரூபாய்கள் புழக்கத்தில் இருக்கும் தொழிலாக இது மாறி வருகிறது. இந்த ரிட்டன் கிஃப்ட்கள் விற்கும் தொழில்முனைவோர்கள் இத்தொழில் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டது…
விஜயலட்சுமி
நான் குடும்ப தலைவியாகதான் இருந்தேன். ஓய்வு நேரத்தில் ஏதாவது தொழில் செய்யலாமே என்கிற யோசனை வந்தது. கொஞ்சம் கைவினைப் பொருட்களை செய்து விற்று வந்தேன். பிறகு நிறைய ஆர்டர்கள் வர அதன் பிறகு மொத்த விற்பனையாளர்களிடம் மொத்த விலைக்கு வாங்கி தேவைப்படுபவர்க்கு விற்க துவங்கினேன். அக்ரிலிக் பெயின்டிங், அலங்கார தட்டுகள், ஜூட் பேக், சிறிய அளவிலான பரிசுப்பொருட்கள் என விற்பனை செய்ய ஆரம்பித்தேன். என்னால் 30 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரையிலான பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. தற்போது மாதம் கணிசமான அளவிற்கு வருமானம் பார்க்க முடிகிறது. என்னிடமே தற்போது 15 ரீசெல்லெர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
ஆர்த்தி
நான் ஐடி வேலையில் இருந்து கொண்டே பகுதிநேரமாக கிஃப்ட்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன். பிரிட்ஜ் மேக்னெட்கள், சாமி படங்களில் மேக்னெட் பொருத்தித் தருவது, சிறிய சாவிக்கொத்துக்கள், சிறிய அளவிலான கைவினைப் பொருட்களை மொத்த ஆர்டராக செய்துத் தருகிறேன். நவராத்திரி நேரத்தில் நிறைய ஆர்டர்கள் வருகிறது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட நவராத்திரி பரிசு பொருட்கள் என்னிடம் வாங்கி எடுத்து செல்கிறார்கள். எனக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் கிடைக்கிறது. இதில் கணிசமான அளவிற்கு லாபமும் கிடைக்கிறது. நமது கற்பனை மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப இந்தத் தொழிலை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
ஜெயஸ்ரீ
எனக்கு சிறு குழந்தைகள் இருப்பதால் வெளியே சென்று வேலை பார்க்க இயலவில்லை. வீட்டிலேயே இருந்து சிறு தொழிலை செய்யலாம் என்று நினைத்த நேரத்தில் இந்த கிஃப்ட் பொருட்கள் தொழில் கைகொடுத்தது. என்னிடம் 25 ரூபாய் முதல் பொருட்கள் உள்ளன. ஏறக்குறைய 2000 வகை பொருட்களை விற்பனை செய்கிறேன். சில நாட்கள் லட்ச ரூபாய் வரை கூட ஆர்டர்கள் கிடைக்கும். நவராத்திரி, திருமண விழாக்கள், பண்டிகை காலங்களில் இதற்கான நல்ல தேவைகள் இருக்கிறது. இதற்கு ஜீரோ முதலீடுதான். நான் பொருட்களை ஆர்டரின் பேரில் வாங்கி மட்டுமே விற்கிறேன். முதலீடு இல்லாமல் இதனை செய்ய முடிகிறது. இதற்கான வாடிக்கையாளர்கள் எனக்கு ஆன்லைன் மூலமாகவே கிடைக்கிறார்கள். வீட்டிலிருந்தே பொருட்களை கை மாற்றி விடுவதன் மூலமாக கணிசமாக சம்பாதிக்கலாம்.
தீபா ஜெயின்
எங்களிடம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் தயாரித்த சிறிய கிஃப்ட்கள் நிறைய விற்பனைக்கு இருக்கிறது. அந்த சிறப்பு குழந்தைகள் பென்சில் பவுச்கள், ஜூட் பேக்குகள், மணிபர்ஸ்கள் மற்றும் சிறிய கைவினை பொருட்கள் என தயாரித்து அனுப்புகிறார்கள். இனிப்பு மற்றும் கார வகைகளையும் தயாரித்து தருகிறார்கள். அந்த பொருட்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் லாபம் அந்த குறிப்பிட்ட குழந்தைகளின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று நானும் கார்ப்பரேட் கம்பெனி விழாக்கள் மற்றும் நவராத்திரி விழாக்களுக்கான கிஃப்ட்கள் போன்றவற்றிற்காக கஸ்டமைஸ்ட் கிஃப்ட் ஹாப்பர்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தரமாக செய்து தருகிறேன். அதே போல் வாடிக்கையாளர்கள் விருப்பமான விலையிலும் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையிலும் பிரத்யேகமாக செய்து தருகிறோம். இந்த நவராத்திரி சீசன்களில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.
அர்ச்சனா
நான் கடந்த சில வருடங்களாக ஆர்டிபிஷியல் ஜுவல்லரி தொழிலை செய்து வருகிறேன். நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் நிறைய புதிய ஆர்டர்கள் கிடைக்கிறது. வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலத்தில் வைத்து கொடுப்பதற்காக சிறிய ரக கம்மல்கள், ஜிமிக்கிகள், வளையல்கள் மற்றும் செயின்களை மொத்தமாக ஆர்டர்கள் செய்து வாங்கி கொள்கிறார்கள். பெண்களுக்கு ஏற்ற தொழில்தான். சிலர் எங்களிடம் மொத்தமாக வாங்கியும் விற்பனை செய்து கொள்கிறார்கள். மொத்தத்தில் கலை ரசனையும், வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து பேசும் திறனும் இருந்தால், சுலபமாக இதை பெரிய அளவில் செய்ய முடியும். இதில் நல்ல வருமானமும் கிடைக்கும். சிறிய முதலீட்டில் நல்ல லாபம் பெற முடியும்.
– தனுஜா ஜெயராமன்
The post குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் ‘கிஃப்ட்’ கலாச்சாரம்!! appeared first on Dinakaran.