குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது சென்னை, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அதிகாலை முதல் அதிகனமழை கொட்டும்

1 month ago 5

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது.

அதன் காரணமாக வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தேபடி பணியாற்ற அனுமதிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்தாலும் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.

ஆனால் வடசென்னையில் புளியந்தோப்பு, ஓட்டேரி, எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் சூளைமேடு ஆசாத்நகர், கோடம்பாக்கம், அசோக்நகர், எம்எம்டிஏ, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. தொடர் மழையால் தண்ணீர் வடிவதில் சிரமம் உள்ளது. ஆனாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைவதால், இன்று காலை மற்றும் நாளை வரை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரலாக மழை பெய்துள்ளது. அதில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 130 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்று தென்மேற்கு பருவமழை விலகி, வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டது.

இது காற்றழுத்த மண்டலமாக மாறி, மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த 4 நாட்களில் தமிழகம் புதுவையில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கனமழையை பொருத்தவரையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம் பகுதிகளில் மிக கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 17ம் தேதியில் வட மேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இரண்டு நாட்கள் கன மழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொருத்தவரையில் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் நேற்று வரை 7 செ.மீ பெய்துள்ளது. இது 84 சதவீதம் இயல்பைவிட கூடுதலாகும். அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆகியவை இணைந்திருந்த நிலையில், அரபிக் கடல் பகுதியில் இருந்த காற்றழுத்தம் தனியாக பிரிந்து சென்ற நிலையில், தற்போது வானிலை நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், வேலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தர்மபுரி, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, 17ம் தேதியில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட்டும், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. நேற்றைய மழையின் நிலவரப்படி அதிகபட்சமாக மணலியில் 200மிமீ மழை பெய்துள்ளது. பெரம்பூர், கொளத்தூர் 190மிமீ, கத்திவாக்கம், அயப்பாக்கம் 180மிமீ, அண்ணா நகர் 170மிமீ, வேளச்சேரி 160மிமீ, பாலவாக்கம் 150மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் 18ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். 19ம் தேதியில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும்.

மேலும், தென் மேற்கு வங்கக் கடல் பகுதி, வட பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய, முதல் நாளிலேயே வட தமிழகத்தில் அதிகபட்சமாக கடப்பாக்கத்தில் 310 மிமீ மழை பெய்துள்ளது. இடையாஞ்சாவடி 200 மிமீ பெய்துள்ளதாக பேரிடம் மேலாண்மைத்துறை நேற்று அறிவித்துள்ளது.

* வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து வட தமிழகத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த பிஎட் சேர்க்கை கவுன்சலிங் கனமழை காரணமாக 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக கல்லூரி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

* பாஸ்போர்ட் அலுவலகங்களும் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது சென்னை, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அதிகாலை முதல் அதிகனமழை கொட்டும் appeared first on Dinakaran.

Read Entire Article