குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; சென்னையில் 3 நாள் அதி கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

1 month ago 5

* காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் வெளுத்து வாங்கும்
* அக்.17ம் தேதி வரை ரெட் அலர்ட்

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவானது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும். அதன் தொடர்ச்சியாக அந்த மாவட்டங்களுக்கு 17ம் தேதி வரை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ளது. முன்னதாக வட கிழக்கு பருவமழை காலத்தில் இந்தியா முழுமைக்குமான மழைப் பொழிவு கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பைவிட 112 சதவீதம் முதல் 115 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்று கணித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று நேற்று காலை உருவானது. இதனால், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று (15ம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். பின்னர் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொள்ளும். அதற்கு பிறகு மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். அதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து 4 நாட்களில் விலகும் நிலையில் கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும். அதனால் வட கிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் (15 அல்லது 16ம் தேதி) தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். அதற்கடுத்த 2 நாட்களுக்கும் மழை நீடிக்கும். 17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் (13ம்தேதி) 50 மிமீ மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த கனமழை எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவ மழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம். அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம். 25 செமீ அளவுக்கு மழை பெய்யும் என்று கூறுவது சரியானது அல்ல. குறிப்பிட்ட இடத்தில் 20 முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று கணித்து சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மழை பெய்த பிறகு தான் தெரியவரும். அதனால் கனமழை பெய்யும் என்றால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு பிறகு, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்ெகாண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும்.

16ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் வட தமிழக கடலோரப் ப குதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தயார் நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன. மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்பு பணிகளுக்காக 59 ஜேசிபிக்கள், 272 மர அறுப்பான்கள், 176 நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவைகளும், அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பேசும்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 33 பல்துறை மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பேசும்போது, தனது மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 21 பல்துறை மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 276 ஜேசிபிக்கள், 10 படகுகள் 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது என்றார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேசும்போது, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 64 பல்துறை மண்டலக் குழுக்கள், 48 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 660 நிவாரண முகாம்களும், 121 ஜேசிபிக்கள், 317 படகுகள், 81 ஜெனரேட்டர்கள் 31 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

The post குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; சென்னையில் 3 நாள் அதி கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article