குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 460 மனுக்கள் மீது உடனடி விசாரணை

3 months ago 19

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 460 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்த கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்ததாவது;பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 460 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சமூக பாதுகாப்புத் திட்டம், ஈமச்சடங்கு, இயற்கை மரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், இயற்கை மரணமடைந்த 3 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.51,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் புதுக்கோட்டை வட்டம், நிஜாம் காலனி முகவரியை சேர்ந்த அபுதாஹீர் என்பவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து வரப்பெற்றுள்ள இறப்பு இழப்பீட்டுத் தொகையினை, அவரது வாரிசுதாரரான மனைவி அப்ரோஸ் பேகம் ரூ.1,07,094 மதிப்பிலான வங்கி காசோலையும் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 460 மனுக்கள் மீது உடனடி விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article