குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உரிய அலுவலரிடம் சான்றிதழ் பெறுவதை உறுதி செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

2 hours ago 1

சென்னை: குரூப் 4 பணிக்கு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் தங்களுக்குரிய சான்றிதழை உரிய அலுவலரிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வுக்கான ரிசல்ட், மதிப்பெண், தரவரிசை விவரம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள், தங்கள் சான்றிதழை கடந்த 9ம் தேதி முதல் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நேற்று தனது எக்ஸ் தளம் பதிவில் வெளியிட்ட பதிவில், “தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர் நலவாரியத்தால் அறிவிக்கையின் பிற்சேர்க்கை II-ல் உள்ள படிவத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது ஓய்வூதிய கொடுப்பாணையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வர்கள் தங்களது பெயர், விடுவிக்கப்பட்ட நாள் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் முன்னாள் ராணுவத்தினர் என உரிமை கோரும் அனைத்து தேர்வர்களும் தாங்கள் அரசுப்பணியில் பணிபுரிவது தொடர்பான சுய உறுதிமொழி படிவத்தையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான இறுதி நாளிலிருந்து ஓராண்டுக்குள் முப்படையிலிருந்து விடுவிப்பு பெறவிருக்கும் தேர்வர்கள், அறிவிக்கையின் பிற்சேர்க்கை II-ல், உள்ள படிவத்தில் படைப்பிரிவின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஆதரவற்ற விதவை என உரிமை கோரும் தேர்வர்கள், சான்றிதழை உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்கள் சான்றிதழில் தங்களது பெயர், கணவர் பெயர், கணவர் இறந்த நாள், தற்போதைய மாத வருமானம் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் சான்றிதழை, உரிய அலுவலரிடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இணையவழியில் பெறப்படாத சான்றிதழில் அலுவலக முத்திரை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

The post குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உரிய அலுவலரிடம் சான்றிதழ் பெறுவதை உறுதி செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article