சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 15.92 லட்சம் பேர் எழுதினர். இதற்கிடையே, குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, பணியிடங்கள் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப்-4 தேர்வு காலி பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விளக்க அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கேள்விகள் வருகின்றன. 2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மூலம் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 3 நிதி ஆண்டுகளுக்கான 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது, சராசரியாக ஓராண்டுக்கு 3,380 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.