கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் வருமானவரித்துறை திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

3 months ago 10

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஒபுளாபுரம் ஊராட்சியில் பாலிஹோஸ் எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் ஹோஸ் பைப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சின்ன ஒபுளாபுரம், நரசிங்கபுரம், பொன்னேரி, செங்குன்றம், புழல், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் கிளை தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வருமானம் குறித்து முறையாக கணக்கு காட்டப்படவில்லை எனவும் வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை 4 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பாலிஹோஸ் நிறுவன அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை பெற்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் வரவு செலவு தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

The post கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் வருமானவரித்துறை திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Read Entire Article