சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்வரிசையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் ‘‘கலைஞரின் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’’ என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதன் விவரம் வருமாறு: செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இந்திய வரலாற்றில், இந்திய ஜனநாயகத்தில், ஒரு மூத்த முதுபெரும் தலைவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். வரலாறுகளை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் படைத்திருக்கிறார் என்ற ஒரு தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவரை யாரும் மறந்து விட முடியாது. எல்லோருக்கும், எல்லா தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். எழுத்தாற்றல், பேச்சாற்றல், நினைவாற்றல், நாடக நடிகர், கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, திரைப்பட வசன கர்த்தா என்று அனைத்து துறைகளிலும், இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு ஜனநாயக தலைவருக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களுக்கும் அவரவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற வேளையில், ஏன் முதல்வராக பொறுப்பேற்ற, பன்முகத் தன்மை கொண்ட, கல்விக்கு அரிய சேவை ஆற்றிய, கலைஞருக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான், எங்கள் மருத்துவர் அய்யாவிடத்தில் சொன்னேன். நாங்களும் மனமுவந்து ஒரு பல்கலைக்கழகத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். சிந்தனை செல்வன் (விசிக): தமிழர்களின் அடையாளத்தை பண்பாட்டுத் தளத்திலும் மீட்டெடுத்த பெருந்தலைவர், முத்தமிழறிஞர், சமத்துவ பெரியார் கலைஞருக்கு அவரின் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்): கலைஞர் என்கிற சொல் ஒரு சரித்திரம். தமிழ் வித்தகர் அவர். ஒரு ஜாம்பவான் அவர், தமிழ் ஜாம்பவான். ஆழ்ந்த இலக்கிய புலமை மிக்கவர். எழுதுவது அல்ல எழுத்து, அந்த எழுத்து எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்வார்கள். அதற்கு இலக்கணமாக இருந்தவர் கலைஞர். அவர் ஒரு அரசியல் சாணக்கியர். அரசியல் வித்தகர். அரசியலில் பல மாற்றங்களை இந்தியாவில் புரட்டிப் போட்டவர் கலைஞர். இவரே ஒரு பல்கலைக்கழகம். இவருக்கு ஒரு பல்கலைக்கழகம். ஆகவே, கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று, இதே அவையில் எண்ணற்ற சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டுவந்து ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தவர். மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர். சமூக நீதியைத் தமிழ் மண்ணில் நிலைநாட்டியவர். நவீன தமிழகத்தை வடிவமைத்தவர். அத்தகைய மாபெரும் தலைவருக்கு, அவருடைய பெயரால் ஒரு பல்கலைக்கழகம் துவங்க வேண்டும். சதன் திருமலைக்குமார் (மதிமுக): மக்களின்மேல் அக்கறை கொண்டவர். மக்கள் வாழ்வின்மீது அக்கறை கொண்டவர். மக்களினுடைய நலத்தின்மீது அக்கறைக் கொண்ட கலைஞரின் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தவேண்டும். இதுவே, மிகவும் காலதாமதம். சொல்லப்போனால், அவர் உயிரோடு இருக்கும்போதே அந்த பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): உயர் கல்வியில் இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது என்றால், அதற்கு விதை விதைத்தவர் கலைஞர். கடற்கரையில் கலைஞருடைய அடக்கஸ்தலத்திற்கு எதிரில் அமைந்திருக்கின்ற நூற்றாண்டு கண்ட சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞருடைய பெயரைச் சூட்ட வேண்டும். ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): பல்கலை என்று சொன்னால் சந்தேகமே இல்லாமல் கலைஞரை தான் குறிக்கும். அவர் தொடாத துறைகளே கிடையாது. தொட்ட துறைகளிலெல்லாம் சாதனை நிகழ்த்தியவர். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர். அப்படிப்பட்ட ஒருவருக்கு, அவருடைய பெயரில் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைப்பது என்பது ஒரு குறைந்தபட்ச மரியாதை. அதை தாமதமில்லாமல் செய்வதற்கு முன்வர வேண்டும். தி.வேல்முருகன் (தவாக): இன்றைக்கும் கலைஞர் உயிரோடு இருந்து என்னை வழிநடத்துவது போல் இந்த அவையில் நான் உணர்கிறேன். அந்த வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான சமூக நீதிக் காவலர் அவர். மிகச் சிறந்த தமிழ்ச் சமூகத்திற்கு பங்காற்றிய கலைஞருடைய பெயரில் தமிழ்ச் சமூகத்திற்கு தலைமையிடமான சென்னையில் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.
அவை முன்னவர் துரைமுருகன்: மகிழ்ச்சியும், உணர்ச்சியும் கொண்டு இந்த அவையில் அமர்ந்து கொண்டு உள்ளதாகவும், திமுக உறுப்பினர் எல்லாரும் மகிழ்ச்சியில் துள்ளளில் உள்ளனர். மேலும், எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கி, அரசியலில் இன்றளவும் நினைக்க வைக்கும் அளவுக்கு செய்த கலைஞருக்கு, கலைஞர் ஆரம்பகால அரசியல் நடத்திய கும்பகோணத்தில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டப்பட இருப்பதாக வரும் செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தலைவர்களின் பேச்சுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, சிந்தனைச் செல்வன், வி.பி.நாகை மாலி, ராமச்சந்திரன், சதன் திருமலைக்குமார், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன்- அவர்களை தொடர்ந்து அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55ஐ பயன்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்கள் கருத்துகளை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவை எல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவில் இன்றைக்கு பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்த கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கலைஞர் விளங்கி கொண்டிருக்கிறார். அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய கலைஞருக்கு- எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கலைஞருக்கு-விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில்- உறுப்பினர் ஜி.கே.மணி குறிப்பிட்டதைபோன்று, எந்தவித தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன். கலைஞரது பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை-மீண்டும் சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, அமைச்சர் கோ.வி.செழியன் பேசுகையில், ‘பொதுவாக தலைவர்கள் வரலாறு படைப்பார்கள். ஆனால், வரலாறாகவே வாழ்ந்த ஒரு தலைவர் உண்டு என்றால், அது கலைஞர்தான். பள்ளிப் படிப்பை தாண்டாமலேயே பல்கலைக்கழகங்களுக்கு பாடமனாவர் கலைஞர்’ என்று கூறினார். தொடர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் பேசுகையில், “நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னன் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க, நம் முதல்வர் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.’’ என்றார்.
The post கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.