
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி சாதுக்கள், துறவிகளின் பக்தி கோஷத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் தொடங்கின.கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் வந்து குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு பிரபலங்கள் புனித நீராடியுள்ளனர்.
இதேபோல் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் உள்பட 73 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பிரதிநிதிகள் குழுவினரும் புனித நீராடினர். சீதா தேவி பிறந்த நாடான நேபாளத்தில் இருந்து 50 லட்சம் பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்-மந்திரி பிரிஜேஷ் பதக், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புனித நீராடியவர்களில் முக்கியமானவர்கள்.
தற்போது மகா கும்பமேள இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தனது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும் திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். கும்பமேளாவில் இதுவரை 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்த விழா நிறைவு பெறும்போது சுமார் 65 கோடி பேர் புனித நீராடி இருப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.