குமரி: கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் 85 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு

4 hours ago 3

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலப்பணிகளை இன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

"முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கலைஞரால் நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10 மீட்டர் கொண்ட Bowstring Arch Bridge (பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் பாலம்) ஆகும். இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள் மீண்டும் படகு மூலம் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எளிதாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. இதனால் கடலின் அழகினை சுற்றுலா பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கண்ணாடி தலைத்தள பாலம் அமைக்கும் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் நிறைவடையும். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து முதலமைச்சரால் பாலம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read Entire Article