குன்றத்தூர்: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில், ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 திருமண மண்டபங்களை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தனர். குன்றத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணம் நடக்கிறது. இதனால் கோயில் வளாகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் கோயிலுக்கு வரும் பக்தர்களும், திருமணத்திற்கு வருபவர்களும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால், கோயில் வளாகத்தில் திருமண மண்டபங்கள்
கட்டவேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திருமண மண்டபங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயில் நிதி ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் 6 திருமண மண்டபங்கள் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் புதிய திருமண மண்டபங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை, துணை ஆணையர்கள் எம்.ஜெயா, கே.சித்ராதேவி, உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, கோயில் பணி யாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post குன்றத்தூர் முருகன் கோயில் சார்பில் ரூ.2.95 கோடியில் 6 திருமண மண்டபங்கள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.