குன்றத்தூரில் பிரபல ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: ஓட்டலை 14 நாள் மூட உத்தரவு

2 weeks ago 4

குன்றத்தூர்: குன்றத்தூரில் பிரபல ஓட்டலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஓட்டலை சோதனை செய்த பின் ஓட்டலை 14 நாள் மூட உத்தரவிட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்றத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ் (25). பூந்தமல்லியில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் குன்றத்தூரில் உள்ள பிரபல ஓட்டலில் 2 பார்சல் பிரியாணி வாங்கி சென்றுள்ளார். பிரியாணியை ராஜேஷ் மற்றும் அவரது தங்கை சுகன்யா, இவரது கணவர் மகேஷ் உள்பட வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது பிரியாணியில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் பிரியாணியை அப்படியே எடுத்து சென்று ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, இதற்கு நான் பொறுப்பாக முடியாது என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனிைடயே, ராஜேஷின் மனைவி ரெபேக்கா வாந்தி எடுத்துள்ளார். பிரியாணி சாப்பிட்ட அனைவரும் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அனைவரும் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் ராஜேஷ் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையை நேற்று சோதனை செய்தனர். ஓட்டலின் சமையல் அறை மற்றும் பிரியாணி பாத்திரங்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ”ஓட்டலில் மேலும் சோதனை நடத்த வேண்டியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகுதான் ஓட்டலை நடத்தவேண்டும். அதுவரை 14 நாட்களுக்கு ஓட்டலை திறக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். பல்லி விழுந்த பிரியாணி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடந்து வருகிறது” என்றனர். இந்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குன்றத்தூரில் பிரபல ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: ஓட்டலை 14 நாள் மூட உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article