குன்னூர் சுற்று வட்டாரத்தில் பெய்த கன மழையால் ரேலியா அணை முழு கொள்ளளவு எட்டியது

1 week ago 2

குன்னூர், நவ.8 : குன்னூரில் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ரேலியா அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரிநீர் வெளியேறி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இது குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்துமை என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் ரேலியா அணை அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 43.7 அடி கொள்ளளவில் கட்டப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தால் ரேலியா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால், தட்டுப்பாட்டை போக்க குன்னூர் நகராட்சி பல்வேறு குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ரேலியா அணையின் நீராதாரமாக மைனலை நீரூற்று இருந்து வருகிறது. குன்னூர் பகுதியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் குடிநீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக ரேலியா அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் 35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரீ நீர் வெளியேறி வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் 3 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி, பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தடையில்லை என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post குன்னூர் சுற்று வட்டாரத்தில் பெய்த கன மழையால் ரேலியா அணை முழு கொள்ளளவு எட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article