பந்தலூர் : பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் ஆற்றை மறித்து தண்ணீர் திருட்டு நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே குந்தலாடி பாக்கனா அருகே தனியார் தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் தேயிலை, காப்பி, குறுமிளகு உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்நிலையில் தோட்ட நிர்வாகம் அப்பகுதியில் செல்லும் ஆற்றை மணல் மூட்டைகள் வைத்து மறித்து தண்ணீரை தங்கள் விவசாயத்திற்கு ஸ்பிரிங்கலர் வைத்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்றரை ஏக்கருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை பெற்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள விவசாயத்திற்கு ஸ்பிரிங்லர் வைத்து இலவச மின்சாரத்தை பயன்படுத்தி ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. 5 எச்பி மோட்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக 25 எச்பி மின்மோட்டர் பயன்படுத்தி வருவதால் மின்வாரியத்திற்கு பல லட்சம் இழப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆறு, நீரோடைகள் வற்றி காணப்படுகிறது. இந்நிலையில் ஆற்றை மறித்து தண்ணீர் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பந்தலூர் வருவாய் ஆய்வாளர் வாசுதேவனிடம் கேட்டபோது, ‘‘ஆற்றில் தண்ணீர் எடுக்கும் சம்பவம் தொடர்பாக புகார் வந்துள்ளது. நேரடியாக சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post குந்தலாடி அருகே ஆற்றை மறித்து தனியார் தண்ணீர் எடுப்பதாக மக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.