குடியாத்தம், செப்.29: குடியாத்தம் அருகே பூங்குளம் மலைப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம், ரங்கசமுத்திரம், ஏரிக்கொல்லை, சேம்பள்ளி, சாணாங்குட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களின் கால்நடைகளை பூங்குளம் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார்கள். சில தினங்களுக்கு முன்பு பூங்குளம் மலைப்பகுதிக்கு கால்நடைகளை ஓட்டிச்சென்றவர்கள், அங்குள்ள பாறை மீது ஒரு சிறுத்தை படுத்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சில நிமிடங்களில் அந்த பகுதியில் குட்டிகளுடன் சில சிறுத்தைகள், கன்றுக்குட்டியை விரட்டிச்சென்றதை பார்த்துள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கால்நடைகளை ஓட்டிக்கொண்டு வெளியேறி விட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பூங்குளம் மலைப்பகுதியில் குட்டிகளுடன் சிறுத்தைகள் நடமாடி வருகிறது. கடந்த மாதம் மலைப்பகுதியையொட்டியுள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் 3 ஆடுகளையும், ஆண்டிகான்பட்டியை சேர்ந்த சண்முகத்தின் 2 ஆடுகளையும் சிறுத்தை கொன்றுள்ளது. இதனால் நாங்கள் கால்நடைகளை ஓட்டிச்செல்வதில்ைல. எனவே உடனடியாக அங்கு சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். சிறுத்தை மற்றும் குட்டிகள் நடமாடுவதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post குட்டிகளுடன் சிறுத்தைகள் நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம் குடியாத்தம் அருகே பூங்குளம் மலைப்பகுதியில் appeared first on Dinakaran.