
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' நேற்று திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.'வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், நிலையாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்' என்று நடிகை பிரியா வாரியர் அஜித் குறித்து பதிவிட்டிருந்தார்.'அஜித்துடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன்' என்று நடிகர் பிரசன்னா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை சிம்ரன் எக்ஸ் தள பக்கத்தில், "'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த என்னை அன்புடனும் வரவேற்றுள்ளீர்கள். அஜித்துடன் மீண்டும் இணைந்து நடித்தது மிகவும் அருமையாக இருந்தது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுக்கு வாழ்த்துகள் " என பதிவிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகில் 1990-களிலும், 2000-த் திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். சில படங்களில் வில்லியாகவும் வந்தார். ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகை சிம்ரன் படப்பிடிப்பு காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.