சென்னை,
அஜித்தின் 63-வது திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருக்கும் திரிஷா, அதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படத்திலும் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும்போது அஜித் உடன் திரிஷாவும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ராகுல் தேவ் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் தேவ் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், மழை, முனி, அரசாங்கம், ஆதவன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர்.
குட் பேட் அக்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அஜித் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.