திருமலை: குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை மேற்கு வங்க மாநில போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 7வது நடைமேடையில் ஜி.ஆர்.பி போலீசார் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். அப்போது புவனேஸ்வர்- ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 பேர் சந்தேகத்திற்குரிய வகையில் இறங்கினர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் மண்டல், தெலங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் வேலை செய்து வருவதும், துணை முதல்வர் அமெரிக்காவில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதும், இதை சாதகமாக பயன்படுத்தி பீகாரில் இருந்து தனது நண்பரான உதய்குமார் தாக்கூரை வரவழைத்து துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் இருந்து தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடியதாக ஒப்பு கொண்டனர்.
இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் தெலங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில் நடந்த ெகாள்ைள சம்பவம் கொள்ளையர்கள் பிடிபட்டதால் வெளிவந்தது தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டு குறித்து தெலங்கானா போலீசார் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ₹2.5 லட்சம், 100 கிராம் தங்க கட்டி, சில வெளிநாட்டு கரன்சி, வெள்ளி பொருட்கள், தங்க நகைகளை காரக்பூர் ஜிஆர்பி எஸ்.பி. தேப சன்யால் பறிமுதல் செய்தார். இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹீல்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ரோஷன் குமார் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை கரக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி appeared first on Dinakaran.