
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபழஞ்சநல்லூரை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் விக்னேஷ் (வயது 25). இவர் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சினேகா (24) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துகொளுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் அவர், வலியால் அலறி துடித்தார். அப்போது அருகில் நின்ற விக்னேசுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீயில் படுகாயம் அடைந்த சினேகா சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தீக்காயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விக்னேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினேகா நேற்று பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.