சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்த விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் முயற்சிகளுக்கு பயனில்லாத நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. இதில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களை கால வரம்பற்ற முறையில் முடக்கி போட்டு, அவைகளை சாரமிழந்து சாகவிடும் ஜனநாயக விரோத செயல்களை தடுக்கும் வகையில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரவேற்ற தீர்ப்பின் மீது குடியரசுத் தலைவருக்கு வினாக்கள் எழுந்திருப்பது எந்த அடிப்படையில் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது, குடியரசுத் தலைவருக்கு இதுபோன்ற வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
The post குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியது; அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்க செய்யும் செயல்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.